Published : 11 Dec 2013 12:00 AM
Last Updated : 11 Dec 2013 12:00 AM

சிங்கப்பூர் "லிட்டில் இந்தியா" கலவரம்: 24 இந்தியர்கள் சிறையிலடைப்பு

சிங்கப்பூர் கலவரம் தொடர்பாக 24 இந்தியர்களை சிறையில் அடைக்க அந்த நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சிங்கப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் பஸ் மோதி சக்திவேல் குமாரவேலு (33) என்ற தமிழர் உயிரிழந்ததால் அங்குள்ள “லிட்டில் இந்தியா” பகுதியில் பெரும் கலவரம் வெடித்தது. இதுதொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் சிங்கப்பூர் நிரந்தர குடி யுரிமை பெற்ற ஒருவர், வங்கதேசத்தை சேர்ந்த 2 பேர், இந்தியர் ஒருவர் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். கலவரத்தில் அவர்களுக்கு தொடர்பில்லை என்பதால் 4 பேரும் விடுவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

மற்ற 24 பேரும் இந்தியர்கள் ஆவர். அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிங்கப்பூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 17-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

24 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை, பிரம்படிகள் தண்டனையாக வழங்கப்படும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

1969-ல் சிங்கப்பூரில் இனக் கலவரம் வெடித்தது. அதன்பின் 40 ஆண்டுகளுக்குப் பின் தற்போது பெரும் கலவரம் வெடித்துள்ளது.

மது விற்பனைக்கு தொடர்ந்து தடை

மது போதையே கலவரத்துக்கு காரணம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதன் காரணமாக லிட்டில் இந்தியா, ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியில் மதுபான விற்பனைக்கு கடந்த திங்கள்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாள்களுக்கு தடை அமலில் இருக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இந்தியத் தூதரகம் சட்ட உதவி

கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 24 இந்தியர்களுக்கு சட்டஉதவிக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சிங்கப்பூர் போலீஸாருடன் பேச்சு நடத்தப் பட்டு வருகிறது.

இதனிடையே கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்த நாட்டின் உள்துறை இணை அமைச்சர் ஈஸ்வரன், போக்குவரத்துத் துறை அமைச்சர் லுயி டக் யா ஆகியோர் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கலவரம் ஏற்பட்டது ஏன்?

லிட்டில் இந்தியா பகுதியில் இருந்து பஸ்கள் மூலம் பணியிடத்துக்கு தொழி லாளர்கள் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை சக்திவேல் குமாரவேலு ஒரு பஸ்ஸில் ஏற முயன்றுள் ளார். அந்த பஸ் கூட்டமாக இருந்ததால் அவரை கீழே இறங்கச் சொல்லி பஸ் டிரைவர் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஓடும் பஸ்ஸில் இருந்து அவர் கீழே இறங்கியபோது பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த தொழி லாளர்கள், பஸ் டிரைவர் லிம்மை அடித்து உதைத்து காயப்படுத்தியுள்ளனர். இந்தத் தகவல் பரவி சுமார் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அப்பகுதியில் குவிந்து கலவரத்தில் ஈடுபட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உண்மையான காரணம் என்ன?

சிங்கப்பூர் கட்டுமானத் துறையில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பல்லா யிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

நாள்தோறும் சுமார் 10 மணி நேரத்துக் கும் மேலாக அவர்கள் பணியில் ஈடுபடு த்தப்படுகின்றனர். சிங்கப்பூர்வாசிகளின் ஊதியத்துடன் ஒப்பிடும்போது இந்தியத் தொழிலாளர்களின் ஊதியம் மிக மிகக் குறைவு.

இந்தவகையில் சிங்கப்பூர் நிறுவ னங்கள், பெரும்பாலான இந்தியத் தொழிலாளர்களை ஏமாற்றி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. பஸ்களில் ஆடு, மாடுபோல் அடைத்துச் செல்லப்படும் அவர்கள், பணியிடத்தில் பல்வேறு வசைச் சொற்களுக்கும் ஆளாவதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல அந்த நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இல்லை. இதனால் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர்.

இதன்காரணமாகவே நீறுபூத்த நெருப்பாக இருந்த தொழிலாளர்களின் குமுறல் தற்போது எரிமலையாக வெடித்துச் சிதறியிருப்பதாக உளவியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் அரசு இனிமேலாவது வெளி நாட்டுத் தொழிலாளர்களின் நலனின் அக்கறை செலுத்தி அவர்களுக்கு உரிய உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x