Last Updated : 27 Jun, 2016 07:26 PM

 

Published : 27 Jun 2016 07:26 PM
Last Updated : 27 Jun 2016 07:26 PM

பிரிட்டன் - ஐரோப்பிய யூனியன் பிளவால் ஆதாயம் சீனாவுக்கே: ஆய்வாளர்கள் கருத்து

பிரெக்ஸிட் என்று அழைக்கப்படும் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன்வெளியேறும் நடவடிக்கையினால் பெரும் பொருளாதாரப் பயன்களை அடையப்போகும் நாடு சீனாதான் என்று இந்தத் துறை சார்ந்த பொருளாதார ஆய்வாளர்கள், நிபுணர்கள் கருதுகின்றனர்.

சீனாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி ஐரோப்பா. ஏற்கெனவே அமெரிக்காவைக் காட்டிலும் சீன முதலீட்டாளர்கள் ஐரோப்பாவையே தங்களை வரவேற்கும் பகுதியாகக் கண்டடைந்துள்ளது.

எனவே ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறினால் பெரும் பொருளாதார வெற்றி சீனாவுக்கே என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஐரோப்பாவில் சீனா ஏற்றுமதிக்கு பலவீனமான தேவைகளே இருந்து வருகிறது, இதனையடுத்து நிதிச்சந்தையில் மந்தநிலை ஏற்படும்போது தங்களது யுவான் மதிப்பை குறையாமல் தக்கவைக்க சீனா போராட வேண்டியுள்ளது. ஆனால் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறி விட்டால், பணபலம் மிக்க சீன நிறுவனங்களுக்கு இருதரப்பிடமிருந்து தேவைகள் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து சீனா-ஐரோப்பா உறவுகள் மைய இயக்குநர் ஸாங் லிஹுவா கூறும்போது, “பிரெக்ஸிட்டினால் சீனாவுக்கு ஏற்படப்போகும் ஆதாயம் என்னவெனில் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வலுவான பொருளாதார உறவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போதைய சூழ்நிலைகளில் பிரிட்டனுக்கும் சரி ஐரோப்பிய யூனியனுக்கும் சரி சீனாவிடமிருந்து இத்தகைய ஒத்துழைப்பு தேவைப்படும்” என்கிறார்.

ஆனால் தங்களுக்கு ஏற்படப்போகும் நன்மைகளைப் பின்னுக்குத் தள்ளி சீன தலைவர்கள் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். திங்களன்று லீ கெகியாங் கூறும்போது, "ஐக்கிய ஐரோப்பா, ஸ்திரமான ஐரோப்பா முக்கியமானது, பிளவு மற்ற நாடுகளையும் அந்தப் பாதையை தேர்ந்தெடுக்கச் செய்யும், பிரிட்டனிலும் கூட பிரிவினைவாத சக்திகள் தலைதூக்கும்” என்று அச்சம் வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸின் பைரேலி டயர்களை தயாரிக்கும் கிளப் மெட், வோல்வோ கார்கள், வீட்டாபிக்ஸ் செரீல், மற்றும் கால்பந்து அணிகளான இத்தாலியின் இண்டர் மிலன், பிரிட்டனின் ஆஸ்டன் வில்லா ஆகியவற்றிற்கு சீன நிறுவனங்கள் உரிமையாளர்கள் ஆவர். லண்டன் சீனாவுக்கு மிகப்பெரிய வர்த்தக மையமாகும்.

சீனாவுக்குத் தேவைப்படும் தொழில்நுட்பம் பிரிட்டன் வசம் உள்ளது. “பிரிட்டனின் தொழிற்துறை வளர்ச்சி அனுபவத்தில் சீனா பயனடையும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சீனா-யுகே தடையற்ற வாணிபம், இருதரப்பு உடன்படிக்கைகளுக்கு நான் பரிந்துரைக்கிறேன்” என்று சீன தொழிற்துறை வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் லூ ஸெங்வீ தெரிவித்துள்ளார்.

வேறு சில நிபுணர்கள் பிரெக்ஸிட்டினால் சீனாவுக்கு பொருளாதாரத்தை விட அரசியல் ஆதாயம் அதிகம் என்று கூறுகின்றனர். சீனா ஸ்டீல் விலையை மிகக்குறைவாக வைத்து ஏற்றுமதி செய்வதாக அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ஏற்கெனவே சாடிவருகின்றன. இதனையடுத்து வாஷிங்டன் தீர்வை வரியை அதிகரித்தது அதாவது 522% அதிகரித்தது. ஆனால் பிரிட்டனின் செல்வாக்கினால் அதிக தீர்வை விதிக்காமல் ஐரோப்பிய யூனியனைத் தடுத்தது.

ஆகவே பொருளாதார நற்பயன்களும் ஏற்படும் அதே வேளையில் சில துறைகளில் பலவீனமும் ஏற்படலாம் என்று பிரெக்ஸிட் தாக்கம் சீனாவுக்கு எப்படி இருக்கும் என்று பல்வேறு கருத்துகளையும் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x