Last Updated : 26 Feb, 2017 11:33 AM

 

Published : 26 Feb 2017 11:33 AM
Last Updated : 26 Feb 2017 11:33 AM

இனவெறி தாக்குதலை தடுக்க என்ன செய்ய போகிறார்கள்? - அமெரிக்க அரசு பதில் அளிக்க வேண்டும்: சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியரின் மனைவி கேள்வி

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம் ஒலாத்தேவில் கார்மின் என்ற நிறுவனத்தில் ஜிபிஎஸ் உருவாக்கும் பொறியாளராகப் பணியாற்றியவர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா (32). இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். தனது நண்பர் அலோக் மாதசாணியுடன் (தெலங்கானாவைச் சேர்ந்தவர்) அங்குள்ள மதுபான விடுதிக்கு கடந்த புதன்கிழமை இரவு சென்றார். அங்கு வந்த அமெரிக்க முன்னாள் கடற்படை வீரர் ஆடம் புரின்டோன் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஸ்ரீநிவாஸ் பரிதாபமாக இறந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டை தடுத்த அமெரிக்க இளைஞர் கிரில்லட் மற்றும் அலோக் மாதசாணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடம், ‘எங்கள் நாட்டை விட்டு வெளியேறு, பயங்கரவாதிகளே’ என்று ஆவேசமாக கத்தியதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இனவெறி தாக்குதல் அதிகரித் துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், கார்மின் நிறுவனம் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நேற்று ஸ்ரீநிவாஸின் மனைவி சுனன்யா துமாலா கூறியதாவது:

இனிமேல் (அதிபராக ட்ரம்ப் பதவியேற்று வெளிநாட்டினருக்கு எதிராக பேசி வருவதால்) இங்கு இருக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அமெரிக்காவில் எங்கெங்கோ துப்பாக்கிச் சூடு நடந்தது குறித்த செய்திகளை செய்தித் தாள்களில் பல முறை படித்திருக்கிறோம். அதுபற்றி நான் பயந்து கொண்டேதான் இருந்தேன்.

அதை என் கணவரிடம் தெரிவித்தேன். ஆனால், அவர் அமெரிக்காவில் நல்ல விஷயங்கள் நடக்கும்’ என்று நம்பிக்கை ஏற் படுத்தினார். ஆனால், இப்போது அமெரிக்காவில் உள்ள சிறு பான்மையினத்தவர்களின் பாது காப்பு கேள்விக் குறியாக இருக்கிறது. அதனால் அமெரிக் காவில் இனிமேல் பாதுகாப்பாக இருக்க முடியுமா என்று சிறுபான்மையினர் மத்தியில் பயம் ஏற்பட்டுள்ளது.

என் கணவருக்கு நேர்ந்தது போல, சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க அமெரிக்க அரசு என்ன செய்ய போகிறது? என் கணவர் ஸ்ரீநிவாஸ் கடந்த 2005-ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்புக்காக டெக்சாஸ் வந்தார். அதன்பிறகு கன்சாஸ் மாகாணத்துக்கு வருவதற்கு முன்னர் 6 ஆண்டுகள் லோவா பகுதியில் வேலை செய்தார். அவ ருக்கு இதுபோன்ற மரணம் ஏற் பட்டிருக்க கூடாது. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இவ்வாறு சுனன்யா கூறினார்.

துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த ஸ்ரீநிவாஸின் நண்பர் மாதசாணி சிகிச்சைக்குப் பிறகு நேற்று மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். காயம் அடைந்த அமெரிக்க இளைஞர் கிரில்லட்டும் தற்போது உடல்நலம் தேறிவருவதாக கன்சாஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையை தீவிரப்படுத்த இந்திய தூதரகம் வலியுறுத்தல்

ந்திய தூதரக செய்தித் தொடர்பாளர் பிரதிக் மாத்தூர் நேற்று கூறும்போது, ‘‘இந்திய பொறியாளர் ஸ்ரீநிவாஸ் கொலை தொடர்பான விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறையை வலியுறுத்தி உள்ளோம். அத்துடன் விசாரணையின் விவரங்களை அவ்வப்போது தெரியப்படுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளோம். இந்திய அரசும் அமெரிக்காவின் கவனத்துக்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்று இந்தியர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

ஸ்ரீநிவாஸ் கொலைக்கு கண்டனம் தெரிவித்ததுடன், விசாரணையை விரைந்து நடத்த வேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது’’ என்றார்.

-பிடிஐ

கன்சாஸ் கலாச்சார ஆசிரியர் வருத்தம்

ன்சாஸ் நகரத்தில் இந்திய கலாச்சாரம் பற்றி கற்றுத் தரும் அஜய் சூட் (50) என்பவர் கூறும்போது, “துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மத்திய கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 2 பேரை சுட்டுவிட்டதாக கூறியுள்ளார். இங்குள்ள இந்திய அமெரிக்கர்களின் பின்புலம் பற்றி அமெ ரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலான அமெரிக்கர்கள் தங்கள் நாட்டை விட்டு வேறு இடங்களுக்கு செல் வதில்லை. அதனால் யார் பாகிஸ்தானி, யார் இந்தியர், யார் ஆப்கானிஸ் தானியர், சீக்கியர்கள் யார் என்பதெல்லாம் தெரிவதில்லை” என்றார்.

“கன்சாஸ் நகரில் 20 லட்சம் பேர் வசிக்கின்றனர். 2001-ம் ஆண்டுக்குப் பிறகு இங்கு இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை இந்திய அமெரிக்கர்கள் என்று கன்சாஸ் நகர இந்திய சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜய் அனபூரப்பா கூறினார்.

-ராய்ட்டர்ஸ்

அமெரிக்காவுக்கு அழுத்தம் தர வேண்டும்: சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று கூறியதாவது: அமெரிக்காவில் பணியாற்றி வந்த ஸ்ரீநி வாஸ் குச்சிபோட்லா என்ற இந்திய பொறியாளரை, அந்நாட்டு கடற்படை வீரர் ஆடம் பூரிண்டன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

குறிப்பாக, சம்பவத்தின்போது ‘நாட்டை விட்டு வெளியேறு’ என கொலையாளி கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாட்டுப்பற்று என்ற பெயரில், சிறுபான்மையினர் மீது நிறவெறியுடன் தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

கொலைக் குற்றவாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்துக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும் வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள், அமெரிக்கர்களின் உதவியால் ஸ்ரீநிவாஸ் குடும்பத்துக்கு குவிகிறது நிதி

சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்ரீநிவாஸுக்கு இந்தியர்களும் அமெரிக்கர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் ஏராளமானோர் தாராளமாக நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்தியர்கள் பலருக்கு அமெரிக்கா ஒரு கனவு தேசம். கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு வந்த இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திரா மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள்.

ஸ்ரீநிவாஸ் மற்றும் அவரது நண்பர் அலோக் மதாசாணி ஆகியோர் இந்தியாவில் பொறியியல் படிப்பை முடித்த பின் முதுநிலை பட்டப்படிப்புக்காக அமெரிக்கா வந்தனர். படித்து முடித்து ஓபிடி எனப்படும் பயிற்சியில் சேர்ந்து பின்னர் எச்1பி விசாவும் பெற்று அமெரிக்காவில் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில்தான் ஸ்ரீநிவாஸ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள கன்சாஸ் நகர இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஸ்ரீநிவாஸ் குடும்பத்துக்காக ஆன்லைனில் திரட்டப்படும் நிதிக்கு தாராளமாக பணம் அளித்து வருகின்றனர். நிதி திரட்டும் அறிவிப்பு வெளியிட்ட 24 மணி நேரத்துக்குள் இந்தியர்கள் மட்டுமன்றி அமெரிக்கர்கள் பலரும் நிதி அளித்துள்ளனர். அதனால் எதிர்பார்த்ததைவிட 3 லட்சம் டாலர் அளவுக்கு நிதி சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x