Published : 12 Oct 2013 12:02 PM
Last Updated : 12 Oct 2013 12:02 PM

ஆப்கனில் நேட்டோ படையின் செயல்பாட்டு காலம் நீட்டிப்பு

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையினரின் செல்பாட்டு காலத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கடைசி தடவையாக நீட்டித்துள்ளது.

இதுதொடர்பான தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்படி, 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை நேட்டோ தலைமையிலான படை ஆப்கனில் தங்கி இருக்கும். நேட்டோ படையினரின் இறுதி வீரர் வெளியேறும் அன்றைய தினமே அந்நாட்டு பாதுகாப்புப் பணி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.

ஆப்கானிஸ்தானில் அல்-காய்தா, தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் தொடர்ந்து பயங்கவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. சட்டவிரோத போதை மருந்து கடத்தலும் தொடர்கதையாக உள்ளது. இதனால், அந்த நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. இது சர்வதேச நாடுகளின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் இன்னமும் அச்சுறுத்தலை ஏற்படுத்து வதாகவே உள்ளன என அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

அல்-காய்தா பயங்கரவாத அமைப்பினரை ஒழித்துக் கட்டுவதற்காக நேட்டோ படை முகாமிட்டு 12 ஆண்டுகள் நிறை வடைந்துள்ள நிலையில், ஆப்கன் மக்களின் இறையாண்மையை மீறும் வகையில் அமெரிக்காவும் நேட்டோ படையும் செயல்பட்டு வருவதாக அந்நாட்டு அதிபர் ஹமீது கர்சாய் குற்றம் சாட்டி இருந்த நிலையில் ஐ.நா. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது.

இதற்கு நடுவிலும், எதிர்காலத்தில் ஆப்கன் ராணுவத்துடன் அமெரிக்க படையினர் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் அடுத்த வாரம் இறுதி செய்யப்படும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

2014-ம் ஆண்டு இறுதிக்குள் நேட்டோ படை ஆப்கனிலிருந்து படிப்படியாக வெளியேற முடிவு செய்துள்ளது. இதன்படி, 1.3 லட்சமாக இருந்த வீரர்களின் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளில் 87,200 ஆகக் குறைந்துள்ளது. இதில் 60 ஆயிரம் வீரர்கள் அமெரிக்கர்கள்.

கடந்த ஜூன் மாதம் ஆப்கன் பாதுகாப்புப் பணி அந்நாட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆப்கன் ராணுவத்துக்கு நேட்டோ தலைமையிலான சர்வதேச உதவிப் படை (ஐஎஸ்ஏஎப்) செயல்பட்டு வருகிறது.

இதையடுத்து, கடந்த சில மாதங்களாக தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x