

2015-ம் ஆண்டு தென்கிழக்கு நகரமான ஷென்செனில் ராட்சத குப்பைமேடு சரிந்து 73 பேர் பலியான சம்பவத்தில் அலட்சியம் மற்றும் கடமையிலிருந்து தவறிய குற்றச்சாட்டில் பல அதிகாரிகள் உட்பட 45 பேருக்கு சீனாவில் கடும் தண்டனை விதிக்கப்பட்டது.
2015 டிசம்பர் மாதம் கட்டுமானக் குப்பைகளும் மண்ணும் மலைபோல் ஓரிடத்தில் குவிக்கப்பட்டன, அதன் பிறகு கனம்ழை புரட்டி எடுத்ததால் இந்த கட்டுமானக் குப்பைகளும் மண்ணும் சகதிமலையானது. இது சரிந்ததில்தான் 70-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்
இந்த சம்பவம் தொடர்பாக நான்ஷான் மாவட்ட மற்றும் போவான் மாவட்ட மக்கள் நீதிமன்றம் ஏப்ரல் 26 முதல் 28 வரை விசாரனை நடத்தி நேற்று தண்டனை அறிவித்தது.
ஷென்செஇல் உள்ள யிக்சியாங்லாங் நிறுவனம், இதுதான் குப்பைக்குவியலை நிர்வகித்து வந்தது. இந்த நிறுவனத்தின் தலைவர் லாங் ரென்ஃபுவுக்கு 20 ஆண்டுகால சிறைத்தண்டனையும் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டன. லஞ்சம் மற்றும் அலட்சியத்திற்காக இந்த தண்டனையை இவர் பெற்றுள்ளார்.
குப்பைக்குவியலுக்கான இடத்தில் 4 மில்லியன் கன மீட்டர்கள் கொள்ளளவு குப்பைகளே கொட்டப்பட வேண்டும், உயரம் 95 மீட்டர்கள் இருக்க வேண்டும், ஆனால் குப்பை மேடு சரிந்து பெரும் விபத்து ஏற்பட்டபோது சோதித்ததில் 5.83 மில்லியன் கன மீட்டர்கள் குப்பையும் உயரம் 160 மீட்டர்களும் இருந்தது தெரியவந்தது.
ஷென்சென் முன்னால் நகர நிர்வாகி மென் ஜிங்ஹாங் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததற்காகவும் 24.9 மில்லியன் யுவான் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டார். இவருக்கு 20 ஆண்டுகால சிறைத்தண்டனையும் 8 மில்லியன் யுவான் அபராதமும் விதிக்கப்பட்டது.
நகரத் திட்டக் கழகத்தின் குவாங்மின் புதிய மாவட்ட நிர்வாகத் தலைவர் பெங் ஷுய்கிங் என்பவருக்கும் இதே குற்றச்சாட்டில் 16 ஆண்டுகால சிறைத்தண்டனையும் 1 மில்லியன் யுவான் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும் 17 அரசு அதிகாரிகளுக்கு அலட்சியம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்காக 3 முதல் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 25 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த விபத்துக்குக் காரணம் பெரும்பாலும் அலட்சியமே என்று விசாரணையில் தெரிய வந்ததையடுத்து கடும் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.