

பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக எல்லைகள் அற்ற துறவி அமைப்பு ஜப்பானில் தொடங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் தொடங்கப்பட்ட எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு, இனம், மொழி, மத வேறுபாடின்றி 70 நாடுகளில் தனது சேவையை வழங்கி வருகிறது. இந்த அமைப்பின் சேவையை பாராட்டி 1999-ம் ஆண்டு அந்த அமைப்புக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் வெற்றியைத் தொடர்ந்து பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் அமைப்பு தொடங்கப்பட்டது. அதேபோன்று இப்போது எல்லைகள் அற்ற துறவிகள் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஜப்பானின் கியோடா நகரில் தொடக்க விழா கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
இந்த அமைப்பின் நிர்வாகியான ஜோகோ ஜி கோயிலின் தலைமை மடாதிபதி ஹிரோகி நாகாஜிமா கூறுகையில், “பொதுவாக புத்த மதத்தைப் பின்பற்றுவோர் பிற மதத்தினருடன் கலந்து பழகுவதில்லை. தனிமனிதனுக்கு வீடு பேறு அடைய வழிகாட்டும் புத்த மதத்தின் மூலம் அனைத்து மதத்தினரிடையேயும் ஒத்துழைப்பை ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன். வறுமை ஒழிப்பு, பேரிடர் காலத்தில் மீட்புப் பணி, பாரபட்சமாக நடத்தப்படுவதற்கு எதிராக குரல் கொடுப்பது உள்ளிட்டவற்றை முன்னெடுத்துச் செல்வோருக்கு எங்கள் அமைப்பு ஆதரவு அளிக்கும்.
துறவிகள் பல்வேறு நற்காரியங்களை செய்கின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் நோயாளிகளுக்கு உதவுதல், இயற்கை பேரிடர் காலத்தில் மீட்புப் பணியில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், அவை அனைத்தும் பொதுமக்களுக்குத் தெரிய வருவதில்லை. இந்த குறையைப் போக்க பேஸ்புக்கில் எங்கள் அமைப்பின் சார்பில் கணக்கு தொடங்க உள்ளோம்” என்றார்.