

பெண் ஜனாதிபதி மோஸ்கோசாவின் ஆட்சி கடுமையான விமர்சனங் களுக்குள்ளாகியது. கியூபாவின் சீற்றத்தையும் சந்தித்தது. தற்போதைய பனாமா எப்படி? பார்ப்போம்.
மத்திய அமெரிக்காவில் உள்ள நகரங்களில் பலவித பண்பாடுகளும், கலாச்சாரங்களும் கொண்ட மனிதர்கள் வாழும் நகரமாக இருக்கிறது பனாமாவின் தலைநகரான பனாமா சிட்டி. வணிகத்திலும் தலைசிறந்து விளங்குகிறது.
போக்குவரத்து நெரிசல்? உண்டு. அப்படி ஒன்றும் நேர்மையாளர்கள் என்று சொல்லிவிட முடியாத டாக்ஸி ஓட்டுநர்கள் உண்டு. சூதாட்டக் கிடங்குகள் உண்டு. எனினும் சர்வதேச வங்கிக் கணக்குகளும், வணிகங்களும் பனாமாவில் முதுகெலும்பாக நிற்கின்றன. அருகிலுள்ள கடற்கரைகள், சுற்றுலாப் பயணிகளின் மனங்களைக் கொள்ளை கொள்கின்றன.
‘பையே நியூசியோ’ என்ற அருங்காட்சி யகம் பலர் மனதைக் கொள்ளை கொள் கிறது. பலவித தாவரங்களையும், நந்தவனங் களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது இது. இதை அற்புதமாக வடிவமைத்தவர் பிராங்க் கெரி என்பவர். உலகப் புகழ் பெற்ற இந்தக் கட்டிடக் கலைஞர்தான் ஸ்பெயினில் உள்ள பிரபல குகேஹேயின் அருங்காட்சியகத்தை உருவாக்கியவர்.
பசிபிக்கை ஒட்டிய முதல் ஐரோப்பியக் குடியேற்றம் பனாமாதான். சுமார் 150 ஆண்டுகளுக்கு ஸ்பெயினின் பிடியில் இருந்தபோது பெரு பகுதியில் காணப்பட்ட தங்கமும், வெள்ளியும் பனாமா மூலம்தான் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
1671-ல் கேப்டன் ஹென்றி மார்கன் என்பவர் பனாமா சிட்டி நகரத்தில் பல அழிவுகளை ஏற்படுத்தினார். இதன் காரண மாக தலைநகரின் பல செயல்பாடுகள் இன்று காஸ்கோ வியஜோ என அழைக்கப்படும் பகுதிக்கு இடம் மாறின. அதன் ஒரு பகுதிதான் பனாமா வியஜோ. இங்குள்ள சிதைந்த கட்டிடங்கள் சரித்திரத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.
இதில் உள்ள மிகப்பெரும் வளாகம் ஒன்று அரசாங்க கஜானா, வரி வசூல் அலுவலகம், சிறை, ஆளுநரின் வீடு அகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது. ஆனால் பிறகு வந்த அரசுகள் இதன் வரலாற்று முக்கியத்துவத்தை உணரத் தவறின. ஒரு கட்டத்தில் இந்தக் கட்டிடங்களை குதிரை லாயமாகக்கூடப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
விதவிதமான பறவைக் கூட்டங்களை பனாமாவில் காண முடியும். யு.எஸ்., கனடா இரண்டு நாடுகளில் உள்ள பறவைகளின் எண்ணிக்கையைவிட அதிகப் பறவைகள் பனாமாவில் உண்டாம்!
பனாமா கால்வாயின் கீர்த்தி பெரியதுதான் என்றாலும் பனாமா ரயில் பாதைக்கும் சில தனிச்சிறப்புகள் உண்டு. மிகமிக அதிக செலவில் கட்டப்பட்ட ரயில் பாதை பனாமாவில் உள்ளதுதான். இதை உருவாக்க ஐந்து வருடங்கள் தேவைப்பட்டன. இதற்காக அந்தக் காலத்திலேயே 80 லட்சம் டாலர்கள் செலவிடப்பட்டன. இந்தக் கட்டுமானத்தின்போது 12,000 பேர் இறந்தனர். ஒரு காலகட்டத்தில் நியூயார்க் பங்குச் சந்தையில் மிக உச்சமான மதிப்பு பனாமா ரயில் நிறுவனத்தின் பங்குகளுக்குத்தான் இருந்தது.
‘பனாமா பேப்பர்ஸ்’ - சமீபத்தில் உலகையே அதிர வைத்த வார்த்தைகள் இவை.
உலகின் பெரிய சட்ட நிறுவனங்களில் ஒன்று ‘மொஸா பொன்செகா’. இது பனாமா தேசத்தைச் சேர்ந்த நிறுவனம். 1986-ல் தொடங்கப்பட்டது. உலகெங்கும் இதற்கு 40-க்கும் அதிகமான அலுவலகங்கள் உண்டு. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளன. அப்படி என்னதான் செய்தது இந்த நிறுவனம்?
தங்கள் வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சுவிஸ் வங்கிகள் வெளியிட முன் வந்ததில் பல பெரும் பணக்காரர்கள் ஆடிப் போய்விட்டனர். பஹாமாஸ், செஷல்ஸ், பனாமா போன்ற நாடுகளை நோக்கிப் படை எடுத்தனர் (அதாவது தங்கள் பெருந் தொகையை முதலீடு செய்தனர்). இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அங்கு வருமான வரி கிடையாது. இரண்டு கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றிய ரகசியம் பாதுகாக்கப்படும்.
பனாமாவில் ‘பேரர் பங்குகள்’ (Bearer shares) கூட உண்டு. அதாவது இந்தப் பங்குகளுக்கான ஆவணங்களில் உரிமையாளர்களின் பெயரே எந்த இடத்திலும் குறிக்கப்பட்டிருக்காது. புனைப் பெயர்களிலும் பங்குகள் வாங்கத் தடை கிடையாது, செய்திகளில் அடிபடும் மொஸா பொன்செகாவை எடுத்துக் கொண்டால் அதன் உயர் அதிகாரிகளேகூட தங்களைப் பங்குதாரர்களாக (வாடிக்கையாளர்களுக்கு பதிலாக) ஆக்கிக் கொள்ள சம்மதிக்கிறார்கள். இதன் மூலம் தொகையை செலுத்துபவரின் பெயர் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.
பல கொழுத்த பணக்காரர்களும், உச்சத்தில் உள்ள அரசியல்வாதிகளும் இதன் வாடிக்கையாளர்கள்.
ஏப்ரல் 2016-ல் இந்த வாடிக்கையாளர்கள் தொடர்பான சில நிதிப் பரிமாற்ற விவரங்கள் வெளியாயின. சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்புதான் இவற்றை வெளியிட்டது. இது வாஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அமைப்பு.
பொன்செகா நிறுவனத்தில் சேமிக்கப்பட்ட தகவல்கள் அவை. அந்த விவரங்களும் இதில் இணைத்துப் பேசப்படும் பெயர்களும் அதிர்ச்சிகரமானவை. தங்கள் நாடுகளில் வரி ஏய்ப்புகளை எப்படியெல்லாம் செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவை விளங்கின. சுமார் 150 அரசியல்வாதிகளின் தலைகள் இதில் உருண்டன. அவர்களில் ஒரு டஜன் பேர் பல்வேறு தேசங்களின் தலைவர்கள். இரண்டு பில்லியன் டாலர்களை இப்படி வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
(உலகம் உருளும்)