உலக மசாலா

உலக மசாலா
Updated on
2 min read

ஜப்பானில் ஆமை டாக்ஸி மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. வேகமாக ஓடும் இந்தக் காலத்தில், ஆமை வேகத்தில் செல்லும் டாக்ஸிக்கு வரவேற்பு இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறார்கள் டாக்ஸி நிறுவனர்கள். நன்றாக ஓட்டக்கூடிய தேர்ந்தெடுத்த ஓட்டுனர்கள் கொண்டு இயங்குகிறது இந்த டாக்ஸி. பதற்றமோ, சத்தமோ இன்றி மெதுவாகச் செல்லும் டாக்ஸியில் பயணிக்க வயதானவர்கள், கர்ப்பமானவர்கள், குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் போன்றோர் விரும்புகிறார்கள். கார் தரையில் ஓடுவதும் தெரியாது, நிற்பதும் தெரியாது. அத்தனை நளினம், அத்தனை நிதானம். ஆமை டாக்ஸிகளின் எண்ணிக்கை வரும் காலத்தில் அதிகரிக்க இருப்பதாகச் சொல்கிறார்கள்.

எங்கேயாவது போகணும்னா ஒரு நாளைக்கு முன்னாலேயே கிளம்பணுமோ…

சமீபத்தில் தன்னுடைய காதல் முறிந்து போன துக்கத்தில் இருந்தார் 26 வயது டான் ஷேன். நடந்துகொண்டிருந்த போது கேஎஃப்சி கண்ணில் பட்டது. சட்டென்று கடையில் போய் உட்கார்ந்து ஆர்டர் கொடுத்தார். உணவு வந்தது. சாப்பிட்டார். வீட்டுக்குப் போனால் காதலனின் நினைவுகள் ஆக்கிரமித்து விடும் என்பதால், மீண்டும் உணவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்தில் டேபிளில் தலை வைத்து தூங்கிவிட்டார். மீண்டும் கண் விழித்தபோது, உணவு ஆர்டர் கொடுத்தார். இப்படியே சில நாட்கள் ஓடின. 24 மணி நேரமும் இயங்கும் கடையில் கூட்டம் அதிகம் இருப்பதாலும், வேலை செய்பவர்கள் ஷிப்டுகளில் வருவதாலும் டான் ஷேனை முதலில் யாரும் கவனிக்கவே இல்லை. மூன்று நாட்களுக்குப் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாகக் கவனிக்க ஆரம்பித்தனர். ஆனாலும் அவரைத் தொந்தரவு செய்யவில்லை. சாப்பிடுவதும் தூங்குவதுமாக இருந்தாரே தவிர, வேறு எதுவும் தொல்லை தரவில்லை டான் ஷேன். ஆனால் விஷயம் மீடியாவுக்குத் தெரிய வந்தது. ஒவ்வொருவராக வந்து விசாரிக்க ஆரம்பித்ததும், ஒரு வாரத்துக்குப் பிறகு உணவை வாங்கிக் கொண்டு கடையை விட்டுக் கிளம்பிவிட்டார் டான் ஷேன். சீனாவின் சிச்சுவான் பகுதியில் டான் ஷேன் பற்றியே எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்!

இப்பவாவது துக்கத்தில் இருந்து வெளிவந்தாச்சா டான் ஷேன்?

ரோமானியா நாட்டில் புச்செனில் மாஸ்நேனி என்ற ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது. ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தப் பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஆய்வகத்தில் ஒரு மனித எலும்புக்கூடு வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். அது முறையாக வாங்கப்பட்ட எலும்புக்கூடாகத் தெரியவில்லை. விசாரித்தபோதுதான், 54 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த அலெக்ஸாண்ட்ரு கிரிகோர் போப்ஸ்குவின் எலும்புக்கூடு என்று தெரியவந்தது. அவர் பள்ளியையும் கற்றுக் கொடுத்தலையும் மிகவும் நேசித்தவர். அதனால் அவர் இறந்த பிறகு, அவரது உடலை இந்தப் பள்ளியிலேயே மாணவர்களின் ஆராய்ச்சிக்காக வைத்து விட்டோம் என்றார்கள் பள்ளியின் பொறுப்பாளர்கள். எலும்புக்கூடால் எந்தவிதமான கெடுதலும் இல்லை என்றும், நன்றாகப் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது என்றும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்கள் அதிகாரிகள்.

இறந்த பிறகும் பாடம் கற்றுக் கொடுக்கும் அபூர்வ ஆசிரியர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in