Last Updated : 19 Jun, 2017 10:05 AM

 

Published : 19 Jun 2017 10:05 AM
Last Updated : 19 Jun 2017 10:05 AM

லண்டனில் மீண்டும் தாக்குதல்: மசூதி அருகே வேனை மோதி தாக்கியதில் ஒருவர் பலி; 10 பேர் காயம்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட் டுள்ளது. அங்குள்ள ஒரு மசூதியில் ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மீது ஒருவர் வேனை மோதி தாக்கியதில் ஒருவர் பலியானார். 10 பேர் காயமடைந்தனர். போலீஸார் அந்த வேன் ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

லண்டனின் வடக்கு பகுதியில் உள்ள செவன் சிஸ்டர்ஸ் சாலை யில் பின்ஸ்பரி பூங்கா அருகே முஸ்லிம் நல்வாழ்வு மையம் உள்ளது. இந்த மையத்தின் வளாகத்துக்குள் உள்ள ஒரு மசூதியில் ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர்.

தொழுகையை முடித்த அனை வரும் நேற்று அதிகாலையில் மசூதியை விட்டு வெளியே வந்தனர். அப்போது, அங்கு திடீரென வந்த ஒரு வேன் அவர்கள் மீது மோதியதில் ஒருவர் பலியானார். மேலும் 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே மற்றொரு மசூதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வேனை ஓட்டிவந்த நபர் தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது அவர் ‘நான் முஸ்லிம்களைக் கொல்ல விரும்புகிறேன்’ எனக் கூறியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். ஆனாலும் அந்த ஓட்டுநரை அங்கிருந்தவர்கள் சுற்றிவளைத்து தாக்க முற்பட்டுள்ளனர்.

ஆனாலும் மசூதிக்குள் இருந்து வந்த ஒரு இமாம், ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்தி உள்ளார். அதற்குள் தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, 48 வயதுடைய அந்த ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறும்போது, “வேன் மோதியதில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள் கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த் தனை செய்கிறேன். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கக் கூடும் எனக் கருதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்” என்றார்.

லண்டன் மேயர் சாதிக் கான் கூறும்போது, “ரம்ஜான் தொழுகை நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்றார்.

முஸ்லிம் அமைப்பு கண்டனம்

இதுகுறித்து பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில் செயலாளர் ஹருண் கான் கூறும்போது, “இந்தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. எனவே, மசூதிகளுக்கு உடனடியாக கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.

பொதுமக்கள் மீது மோதிய வேனில் 3 பேர் இருந்ததாக சிலர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், வேனில் ஓட்டுநரைத் தவிர வேறு யாரும் இல்லை என லண்டன் போலீஸார் தெரிவித் துள்ளனர்.

கடந்த 3 மாதங்களாக பிரிட்ட னில் அடுத்தடுத்து தீவிரவாத தாக்குதல் நடைபெற்று வருகின் றன. கடந்த ஜூன் 3-ம் தேதி நடந்த தாக்குதலில் 8 பேரும், அதற்கு 2 வாரம் முன்பு நிகழ்ந்த தாக்குதலில் 22 பேரும், மார்ச் 22-ல் நடந்த தாக்குதலில் 6 பேரும் பலியாயினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x