உலக மசாலா: பாவப்பட்ட ஜோர்டனுக்கு நல்ல நண்பர்கள் கிடைக்கட்டும்!

உலக மசாலா: பாவப்பட்ட ஜோர்டனுக்கு நல்ல நண்பர்கள் கிடைக்கட்டும்!
Updated on
2 min read

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வசிக்கிறார் 19 வயது ஜோர்டன் கோசோவிச். 7 வயதில் ரத்தப் புற்றுநோய் வந்தது. அடுத்த 4 ஆண்டுகள் நோயை எதிர்த்துக் கடுமையாகப் போராடினார். இதனால் ஜோர்டனின் குழந்தைப் பருவம் தொலைந்ததுடன் சமூக வாழ்க்கையிலிருந்தும் துண்டிக்கப்பட்டார். நோயி லிருந்து மீண்டு பள்ளிக்குச் சென்றார். அவருடன் படித்தவர்கள் 4 வகுப்புகள் முன்னேறியிருந்தனர். அதனால் அவர்களிடம் நட்பு பாராட்ட முடியவில்லை. தொடர்ந்து எடுத்த கீமோதெரபியால் ஜோர்டனின் தலைமுடி கொட்டின. அளவுக்கு அதிகமான மருந்துகளை உட்கொண்டதால், உடல் பருமனானது. சக மாணவர்கள் பேச மாட்டார்கள். பலர் முடி உதிர்வதையும் உடல் பருமனையும் மிக மோசமாகக் கிண்டல் செய்தனர். தனிமை, கிண்டல் போன்றவற்றால் ஜோர்டன் மிகவும் உடைந்து போனார். படிப்பில் கவனத்தைச் செலுத்தி, உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார். அங்கே ஏற்கெனவே இருந்த சூழலை விட 100 மடங்கு மோசமான சூழல் உருவானது. நண்பர்கள் இன்றி, தனியாக இருக்கும் ஜோர்டனை உடலாலும் வார்த்தைகளாலும் துன்புறுத்த ஆரம்பித்தனர். “புற்றுநோயை விட, மீண்டு வந்த வாழ்க்கை மிக மோசமாக இருந்தது. எனக்கென்று சில நண்பர்கள் கிடைத்தால், என்னை யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள். நான் எவ்வளவோ முயன்றும் நண்பர்களைப் பெற முடியவில்லை. அதனால்தான் என்னுடைய கதையைச் சொல்லி ஒரு விளம்பரம் கொடுத்தேன். குறைந்தபட்சம் சமூக வலைதளங்களின் மூலமாவது என்னுடன் தொடர்பில் இருக்கும்படிக் கேட்டுக்கொண்டேன். 5 ஆயிரம் பேருக்கு மேல் விளம்பரத்தைப் பார்த்திருக்கிறார்கள். இதுவரை நேரில் யாரும் என்னைத் தொடர்புகொள்ளாவிட்டாலும் ஃபேஸ்புக் மூலம் ஏராளமானவர்கள் ஆறுதல் சொல்லி வருகிறார்கள். இனி என் துயரம் விலகும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது” என்கிறார் ஜோர்டன் கோசோவிச்.

பாவப்பட்ட ஜோர்டனுக்கு நல்ல நண்பர்கள் கிடைக்கட்டும்!

அயர்லாந்தின் டப்ளின் நகரில் 60 வயது ஜான் எட்வர்ட், ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக 3 நாட்கள் சவப்பெட்டிக்குள் வசிக்கிறார். மன அழுத்தம், போதைப் பொருட்கள், ஆல்கஹாலுக்கு அடிமையாதல், தற்கொலை எண்ணம் போன்றவை தற்போது அதிகரித்து வருகின்றன. அவற்றின் தீமைகளை எடுத்துச் சொல்லவே இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதாகச் சொல்கிறார் ஜான் எட்வர்ட். “நான் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, என்னுடைய 20 வருட வாழ்க்கையைத் தொலைத்தேன். இரண்டு வகை புற்றுநோய்கள் வந்து மீண்டேன். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். இறுதியில் கெட்ட விஷயங்கள் அனைத்தையும் கைவிட்டு, என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அறக்கட்டளையை ஆரம்பித்தேன். கடந்த 23 ஆண்டுகளாகச் சிறந்த மனிதனாக வாழ்கிறேன். எங்கள் அறக்கட்டளை மூலம் ஏராளமானவர்களை மீட்டு, நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருக்கிறோம். சவப்பெட்டிக்குள் நான் இருக்கும் செய்தி பரவினால் விழிப்புணர்வு ஏற்படும். அறக்கட்டளைக்கு உதவிகள் கிடைக்கும். மின்சாரம், வைஃபை வசதி இருப்பதால் 3 நாட்களை எளிதில் கடத்திவிடமுடியும். ஸ்கைப் மூலம் வெளியாட்களுடன் தொடர்பில் இருக்கிறேன்” என்கிறார் ஜான் எட்வர்ட்.

விழிப்புணர்வுக்காகச் சவப்பெட்டியில் வாழ்க்கை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in