பருவநிலை மாற்றம்: பாரிஸ் ஒப்பந்தத்தில் இணையும் இந்திய முடிவுக்கு ஐ.நா. வரவேற்பு

பருவநிலை மாற்றம்: பாரிஸ் ஒப்பந்தத்தில் இணையும் இந்திய முடிவுக்கு ஐ.நா. வரவேற்பு
Updated on
1 min read

பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இணையும் இந்தியாவின் முடிவு துரித நடவடிக்கை என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய பான் கீ மூனின் துணை செய்தித்தொடர்பாளர் ஃபர்ஹான், ''பான் கீ மூன் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் பெரும்பான்மையான நாடுகள் கையெழுத்திட வேண்டுமென விரும்புகிறார். இதுதொடர்பான இந்தியாவின் துரித முடிவு குறித்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். மேலும் அவர் ஒப்பந்தம் தொடர்பாக முறையான முடிவுகளை இந்தியா விரைவில் எடுக்கும் என எதிர்பாக்கிறார்'' என்று கூறியுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் நடைபெற்ற பாஜகவின் தேசியக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்துக்கு காந்தி பிறந்த நாளான வரும் 2-ம் தேதி இந்தியா ஒப்புதல் வழங்கும் என்று தெரிவித்திருந்தார்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்

சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. புவி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் இலக்கு. பருவ நிலை மாறுபாடு பிரச்சினையை எதிர் கொள்ள வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,70,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றும் ஒப்பந்தத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உலகத் தலைவர்கள் புவி வெப்பமடைவதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தமானது நடைமுறைக்கு வர வேண்டுமானால் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ள உலக நாடுகளில் 55 நாடுகளாவது இதில் இணைய வேண்டும்.

கடந்த மாதம்தான் உலகின் இரண்டு பெரிய வெப்ப வெளியீட்டாளர்களான அமெரிக்காவும், சீனாவும் முறைப்படி பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

உலகளாவிய அளவில் கரியமில வாயுக்களை அதிகம் வெளியிடும் நாடுகளில் அமெரிக்காவும் சீனாவும் முன்னணியில் உள்ளன. இரு நாடுகளும் சுமார் 40% அளவுக்கு கரியமில வாயுவை வளிமண்டலத்தில் கலக்கச் செய்கின்றன.

இந்தியா இலக்கு

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான இந்த நடவடிக்கை, வளரும் நாடுகளின் தொழில்நுட்ப வளர்ச்சியை பாதித்துவிடக்கூடாது என்ற குரலும் எழுந்து வருகிறது.

இந்நிலையில் இந்தியா, மாற்று எரிசக்திகள் மூலம் 175 ஜிகா வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக அறிவித்திருக்கிறது.

2022-ல் சூரிய சக்தி மூலம் 100 ஜிகாவாட்ஸ் மின்சாரத்தையும், காற்றாலைகள் மூலம் 60 ஜிகாவாட்ஸ் மின்சாரத்தையும், நீர் மின்சக்தி மூலம் ஜிகாவாட்ஸும், இயற்கை கழிவுகளில் இருந்து 5 ஜிகாவாட்ஸ் மின்சாரமும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in