

‘ச்சொச்சொச்சொ... பாவம் நாய்.. வாயில்லாப் பிராணி’ என்ற பச்சாதாபம் சிலருக்கு சரக்கு அடிக்கிற நேரத்தில் வரும். ‘ந்தா.. நீயும் குடி’ என்று அதற்கு சொட்டு ஊற்றுவார்கள். மறுநாள் காலையில் எங்காவது சுவரில் முட்டிக்கொண்டு அந்த நாய் கவிழ்ந்தடித்து தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததுமே வீட்டு எஜமானியம்மாவுக்கு கோபம் புசுபுசுவென்று வரும். ‘அந்தாளுக்கு தான் புத்தியில்ல.. உனக்கு எங்க போச்சு அறிவு’ என்று தனது மொத்த கோபத்தையும் கொஞ்சூண்டு சரக்கடித்த டைகரிடம் காட்டுவார்.
இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காகவே நாய்களுக்கான பிரத்யேக பீர் ஐட்டங்களை சில வெளிநாட்டு நிறுவனங்கள் சில ஆண்டுகளாகத் தயாரித்து வருகின்றன. பேருதான் சரக்கு. அதில் ஒப்புக்குக்கூட ஆல்கஹால் கிடையாது. நாய்கள் சப்புக்கொட்டி சாப்பிடட்டுமே என்று இறைச்சி வாசனையை மட்டும் சேர்ப்பார்கள்.
‘எங்களுக்கு?’ என்று பூனைச் சங்கங்கள் கொடி பிடித்ததா தெரியவில்லை. ஜப்பானில் செல்லப் பிராணிகளுக்கான ஆகாரங்கள் தயாரிக்கும் பி அண்ட் ஹெச் லைப்ஸ் என்ற நிறுவனம் தற்போது பூனைகளுக்கான ஒயினைத் தயாரித்திருக்கிறது. ‘ஞாங் ஞாங் நவ்யு’ என்று பெயர். ஜப்பான் மொழியில் மியாவ் மியாவ் என்று அர்த்தமாம். நாய் பீர் போலவே இதிலும் ஆல்கஹால் கிடையவே கிடையாது. நொதிக்காத திராட்சை ஜூஸ் மட்டும் பயன்படுத்தி தயாரித்துள்ளனர். முதல்கட்டமாக ஆயிரம் பாட்டில்கள் மட்டுமே வெளியிட்டிருக்கிறார்கள். பூனைகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து எலி வாசனை, பால் வாசனை, மீன் வாசனை என மேலும் பல நறுமணங்களில் வரக்கூடும். இப்போதைக்கு பாட்டில் விலை 245 ரூபாய்!