

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிஸபெத் திரைப்படம் மற்றும் நாடக நடிகர்களுக்கு பக்கிங்ஹம் அரண்மனையில் விருந்து அளித்து கௌரவித்தார்.
பிரிட்டனில் நாடகக் கலை அகாடமியான ராயல் அகாடமி ஆப் டிராமடிக் ஆர்ட் (ஆர்ஏடிஏ) பிரசித்தி பெற்றதாகும். இதன் புரவரலராக ராணி 2-ம் எலிஸபெத் உள்ளார். ராணி 2-ம் எலிஸபெத் இளவரசி கேத் மிடில்டனுடன் இணைந்து நாடகக் கலைஞர்களுக்கு விருந்தளித்தார்.
அப்போது, திரைப்படத்திலும், நாடகத்திலும் ராணி 2-ம் எலிஸபெத்தாக நடித்த டேம் ஹெலன் மிர்ரெனையும் எலிஸபெத் சந்தித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்டீவ் மெக்குயின், ரோஜர் மூர், டேம் ஏஞ்செலா லான்ஸ்பரி, ஜோவான் காலின்ஸ், மைக்கேல் ஷீன், ஜான் ஹர்ட், ஆலன் ரிக்மேன், டாம் ஸ்டாப்பர்டு, ஆலன் பென்னட், ரால்ப் பியன்னெஸ், மைக்கேல் காம்பென், லென்னி ஹென்றி உள்பட பலர் பங்கேற்றனர்.
விருந்தின்போது ராயல் அகாடமி ஆப் டிராமடிக் ஆர்ட்-இல் பயின்று வரும் மாணவர்கள், திரை பிரபலங்களுடன் இணைந்து கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். டேம் ஹெலன், ஷேக்ஸ்பியரின் “தி டெம்பெஸ்ட்” நாடகத்தில் ஒருகாட்சியின் வசனத்தைப் பேசிக்காட்டினார்.
நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, டேம் ஹெலனுக்கு, இளவரசர் வில்லியம் கௌரவ பெல்லோஷிப் விருது வழங்கினார். அப்போது, வேடிக்கையாக டேம் ஹெலனை பாட்டி என அழைத்துக் கேலி செய்தார் வில்லியம்.