

ஐநாவுக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி சிறந்த துணை நடிகருக்கான அஸ்கர் விருது பெற்ற மஹெர்சலா அலிக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் தெரிவித்ததற்கு எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து அதனை நீக்கினார்.
89-வது ஆஸ்கர் திருவிழா திங்கட்கிழமையன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருது 'மூன்லைட்' படத்தில் நடித்த மஹெர்சலா அலிக்கு வழங்கப்பட்டது.
இதன்மூலம் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது பெறும் முதல் முஸ்லிம் மஹெர்சலா அலி ஆவார்.
இதனையடுத்து பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி தனது ட்விட்டர் பக்கத்தில் மஹெர்சலா அலிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
மஹெசர் அலி அகமதிஸ் பிரிவைச் சேர்ந்தவர். அவர் முஸ்லிம் கிடையாது என்று மலீஹா லோதியின் பதிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து ட்வீட்டை மலீஹா லோதி நீக்கினார்.
பாகிஸ்தானில் அரசியலைப்புச் சட்டத்தின்படி அகமதியா பிரிவினர் அந்நாட்டில் முஸ்லிம்களாக கருதப்படுவது கிடையாது. அகமதியா பிரிவினர் பாகிஸ்தான் அரசியலைப்புச் சட்டத்தின் இரண்டாவது பிரிவின் கீழ் மத உரிமைகளை இழந்து நிற்கிறார்கள்.
பாகிஸ்தானின் அரசியலைப்புப் பிரிவு 260(3) அகமதியா பிரிவினர்கள் முஸ்லிம் அல்லாதவர் என்று அறிவித்திருக்கிறது.
மஹெர்சலா அலி 'மூன்லைட்' படத்தில் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.