

ஐ.நா. புதிய பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸும் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்பும் தொலைபேசியில் உரையாடினர்.
வரும் 20-ம் தேதி அமெரிக் காவின் 45-வது அதிபராக ட்ரம்ப் பதவியேற்க உள்ளார். அவர் அண்மையில் வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளில், ஐ.நா. சபை மனமகிழ் மன்றம் போல செயல்படுகிறது. அந்த அமைப்பு பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை, மாறாக பிரச்சினைகளை உரு வாக்குகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
ஐ.நா.வின் புதிய பொதுச் செயலாளராக போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் கடந்த 1-ம் தேதி பதவியேற்றார். கருத்து மோதலுக்குப் பிறகு கடந்த 4-ம் தேதி குத்தேரஸும் ட்ரம்பும் தொலைபேசியில் முதல்முறையாக பேசினர். அப்போது ஐ.நா. சபையின் செயல்பாடு, சர்வதேச நிலவரங்கள் குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஐ.நா. சபை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறியபோது, குத்தேரஸ், ட்ரம்ப் பேச்சுவார்த்தை ஆக்கப் பூர்வமாக இருந்தது என்று தெரிவித்தார்.