

நியூயார்க்கில் உள்ள ஒரு புகழ்பெற்ற துணிக்கடையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது மனைவி, மகள்களுக்காக துணிகள் வாங்கினார். முன்னறிவிப்பு ஏதுமின்றி ஒபாமா அந்தக் கடைக்குச் சென்றதால் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
அமெரிக்க அதிபர் என்ற மிகப்பெரிய பொறுப்புக்கு நடுவிலும் தனது குடும்பத்தினர் மீது மிகுந்த அக்கறை செலுத்தி வரும் ஒபாமா, சிறந்த குடும்பத் தலைவராக விளங்குகிறார். இந்நிலையில், மன்ஹாட்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற ஜிஎபி துணிக்கடைக்குள் செவ்வாய்க்கிழமை திடீரென சென்றதாக வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
பின்னர் அங்கிருந்த விற்பனையாளரிடம் தனது குடும்பத்தினருக்காக துணி எடுக்கப்போவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த புதிய துணி வகைகளை ஒபாமாவுக்குக் காட்டியுள்ளார்.
மகள்களுக்காக கிரே மற்றும் வெள்ளை நிறங்களில் கோடுபோட்ட ஸ்வெட்டர்கள் மற்றும் கோரல் ஸ்வெட்டர்களைத் தேர்ந்தெடுத்தார். மனைவி மிஷெலுக்காக சில துணி வகைககளை வாங்கிய அவர் அதற்கான பில் தொகையை தனது கிரடிட் கார்டு மூலம் செலுத்தியதாக என அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், ஜிஏபி நிர்வாகமோ ஏற்கெனவை தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது. இது ஊழியர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரத்துக்கும் நல்லது என ஒபாமா தெரிவித்ததாக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.