இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கவலையளிக்கிறது: அமெரிக்க அதிபர் மாளிகை முதல்முறையாக வருத்தம்

இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கவலையளிக்கிறது: அமெரிக்க அதிபர் மாளிகை முதல்முறையாக வருத்தம்
Updated on
1 min read

அமெரிக்காவில் இந்திய பொறியாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கவலையளிக்கிறது என்று அந்த நாட்டு அதிபர் மாளிகை முதல்முறையாக வருத்தம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 22-ம் தேதி அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம் ஒலாத்தேவில் உள்ள மதுபான விடுதிக்கு சென்ற இந்திய பொறியாளர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லாவை அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் ஆடம் சுட்டுக் கொன்றார். இனவெறி காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லுவர் அருங்காட்சியகத்தில் அண்மையில் எகிப்து இளைஞர் ஒருவர் கத்தியால் பாதுகாவலரை குத்திய சம்பவத்தை அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையாகக் கண்டித்தார். ஆனால் ஒலாத்தே தாக்குதல் சம்பவம் குறித்து அவர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

குடியேற்றவாசிகள், அகதிகள், முஸ்லிம்களுக்கு எதிராக அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து வெறுப்பை உமிழ்ந்து வருவதால் அமெரிக்காவில் இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் ஹிலாரி கிளின்டன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அமெரிக்கா முழுவதும் இனவெறி தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை முதல்முறையாக வருத்தம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:

அமெரிக்காவில் யூத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது இனவெறி தாக்குதல். இதேபோல கன்சாஸ் மாகாணம், ஒலாத்தே சம்பவத்தின் முதல்கட்ட தகவல்கள் மிகுந்த கவலையளிக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in