

104 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் விண்வெளிக்கு வெற்றிகரமாக செலுத்தியுள்ளது இந்திய மக்களை பெருமையடையச் செய்திருக்கும் சாதனையாகும் என்று சீன அரசு ஊடகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
“பலரும் பின் தொடர்ந்து கூர்ந்து கவனித்த உலக சாதனையை இந்தியா செய்துள்ளது, இந்திய மக்கள் பெருமை கொள்ள காரணமுள்ளது” என்று பாராட்டினாலும் சில இடங்களில் விமர்சனங்களையும் முன் வைத்துள்ளது சீன அரசு நாளிதழ். அதாவது “கோடிக்கணக்கில் படிப்பறிவில்லாதவர்களும் ஏழைகளும் உள்ள நாடு என்ற நிலையில் சீனாவுடன் போட்டியிட்டு 2013-ல் மங்கள்யான் அனுப்புவது அவசியம்தானா” என்ற தொனியில் தலையங்கம் தீட்டியுள்ளது.
மேலும், “விண்வெளி தொழில்நுட்ப பந்தயம் என்பது எவ்வளவு சாட்டிலைட்களை ஒரே சமயத்தில் அனுப்புவது என்பது பற்றிய எண் விளையாட்டல்ல, எனவே இந்தச் சாதனையின் முக்கியத்துவம் வரம்புக்குட்பட்டதே.
கடினமாக உழைத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி பெற்ற வெற்றியாகும் இது, அதுவும் குறைந்த செலவில், முதலீட்டில் இத்தகைய சாதனையை நிகழ்த்தியிருப்பது மற்ற நாடுகளும் இது பற்றி யோசிக்க வழிவகை செய்துள்ளது.
2008-ல் சந்திரமண்டலத்தில் கால்பதித்தது, ஆசிய நாடுகளில் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது இந்தியா, 2013-ல் ஆளில்லா விண்கலத்தை செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பியது
இந்தியாவின் இத்தகைய சாதனைகளிலிருந்து பல பாடங்களைக் கற்றுக் கொள்ளலம். வளர்ந்து வரும் ஒரு சக்தியாக ஒரு நல்ல விஷயத்தை இந்தியா செய்துள்ளது. அதன் அதிநம்பிக்கையான ஆனால் நடைமுறை சாத்தியம் கொண்ட இத்தகைய விண்வெளி திட்டங்கள் வளர்ச்சிக்கான ஊக்கமாக பார்க்க முடிகிறது
இந்தியாவின் அரசியல் மற்றும் சமூகத் தத்துவம் ஆழமான சிந்தனைக்குரியதே.
இருப்பினும் ஒருநாட்டின் விண்வெளி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அது பட்ஜெட்டில் எவ்வளவு இதற்காக ஒதுக்குகிறது என்பதைப் பொறுத்ததே. உலக பொருளாதார கூட்டமைப்பு 2016-ல் வெளியிட்ட அறிக்கையின் படி அமெரிக்காவின் 2013-ம் ஆண்டு விண்வெளி பட்ஜெட் 39.3 பில்லியன் டாலர்கள், சீனா 6/1 பில்லியன் டாலர்கள், ரஷ்யா 5.3 பில்லியன் டாலர்கள், ஜப்பான் 3;6 பில்லியன் டாலர்கள், இந்தியா 1.2 பில்லியன் டாலர்கள்.
சீனாவை ஒப்பிடும் போது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி நான்கில் அல்லது ஐந்தில் ஒரு பங்குதான் இருக்கும், ஆனால் விண்வெளி ஆய்வுக்கு ஒதுக்கப்படும் தொகை சீனாவுக்கு இணையாக உள்ளது.
இந்தியாவின் ராணுவ பட்ஜெட் சீனாவை ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்குதான், ஆனால் இது சீனாவின் ராணுவ பட்ஜெட்-ஜிடிபி விகிதத்தை விட இந்தியா அதிகம் செலவிடுகிறது.
இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பத் திட்டம் தேசத்தின் மதிப்பை உயர்த்துவதாகும், இந்தியா வீனஸிலும் கால்பதிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது ஊடகங்கள் ஊதிப்பெருக்கலே தவிர இதற்கான ஆய்வு நடைபெறுவதாக தெரியவில்லை
ஒட்டுமொத்தமாக அமெரிக்கா, சீனாவைக் காட்டிலும் இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பம் பின்னால்தான் உள்ளது. அது இன்னமும் முழுநிறைவான ஒரு அமைவை உருவாக்கவில்லை.
உதாரணமாக இந்திய ராக்கெட் இஞ்ஜின்கள் ஆற்றல் குறைவானதாகவே உள்ளது, எனவே பெரிய அளவிலான விண்வெளி ஆய்வை நடத்த முடியாது. இந்திய வானியல் விஞ்ஞானி யாரும் விண்வெளியில் இல்லை, விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திட்டமும் இன்னும் தொடங்கப்படவில்லை.
தேசிய வளர்ச்சியில் இந்தியா பலவீனமான அடித்தளத்தையே கொண்டுள்ளது, காரணம் உலகத்தரம் வாய்ந்த பணக்காரர்கள், மிகப்பெரிய அளவில் ஏழைகள் என்று படிமுறையில் பிளவு அதிகம் உள்ளது.
இவ்வாறு கூறுகிறது சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ்.