

உலகில் சுமார் 120 கோடி பேர் நாளொன்றுக்கு ரூ.75-க்கும் குறைவான ஊதியத்தில் வாழ்கின்றனர் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சார்பில் உலக வறுமை ஒழிப்பு தினம் நேற்றுமுன்தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அதன் பொதுச்செயலாளர் பான் கி-மூன் கூறியதாவது:
1990 முதல் 2010 வரையிலான காலத்தில் 70 கோடிக்கும் அதிகமானோர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 2008 பொருளாதார தேக்க நிலைக்குப் பிறகு சில நாடுகளில் வறுமை அதிகரித்திருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி உலகில் சுமார் 220 கோடி பேர் நாளொன்றுக்கு ரூ.75-க்கும் குறைவான ஊதியத்தில் வாழ்கின்றனர். 240 கோடி பேர் நாளொன்றுக்கு ரூ.120-க்கும் குறைவான ஊதியத்தில் வாழ்க்கை நடத்துகின்றனர்.
உலக நாடுகளில் பல கோடி பேர் இன்னமும் பசியால் வாடுகின்றனர். அந்த நிலை மாற வேண்டும். ஒருவர்கூட வறுமையில் வாடக்கூடாது என்ற கொள்கையுடன் ஐ.நா. தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஐ.நா.வின் வறுமை ஒழிப்புத் திட்டங்களில் அனைத்து நாடுகளும் பங்கேற்க வேண்டும்.
தற்போது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியரா லியோன், கினி ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அந்த நாடுகள் மட்டுமன்றி உலகம் முழுவதையும் எபோலா அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.