

இலங்கையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் 200 பேர் உயிருடன் புதைந்தனர்.
இவர்கள் அனைவரும் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வந்தவர்கள்.
இலங்கையின் பாதுளை மாவட்டத்தில் இந்திய வம்சாவளி தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றனர். இவர்கள் அனைவருமே தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் ஏழை மக்கள்.
மழைக் காலத்தில் இப்பகுதி யில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இலங்கை அரசு 2011-ம் ஆண்டே எச்சரிக்கை விடுத் துள்ளது. எனினும் தேயிலை தோட்ட முதலாளிகள் இப்பகுதியில் தொழிலாளர்களை தங்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தேயிலை தோட்ட முதலாளிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார்.
பாதுளை பகுதியில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கொஸ்வந்த மீரியபெத்தை தேயிலை தோட்ட பகுதியில் நேற்றுமுன்தினம் காலை 7 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்தன. சுமார் 200 பேர் வரை அங்கு இருந்தனர். சுமார் 25 உடல்கள் வரை மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் நடந்து 2 நாள்கள் கடந்து விட்டதால் மண்ணில் புதைந்த அனைவருமே உயிரிழந் திருப்பார்கள் என்று அஞ்சப் படுகிறது. அப்பகுதியில் இலங்கை ராணுவத்தினரும், மீட்புக் குழுவினரும் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வீடுகளை இழந்த 817 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை இலங்கை அதிபர் ராஜபக்ச நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவ தாலும், அப்பகுதி சேறும், சகதி யாக இருப்பதாலும் மீட்புப் பணி களை வேகமாக மேற்கொள்ள முடியவில்லை. இலங்கை ராணுவம், விமானப் படை வீரர் கள், போலீஸார், சுகாதார பணியா ளர்கள், தன்னார்வ நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என ஆயிரம் பேர் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா உதவி
இலங்கையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவியளிக்க இந்தியா முன்வந்துள்ளது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதர் ஒய்.கே.சின்ஹா, இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இலங்கை அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.