

அமெரிக்காவின் கலிப்போர்னியா மாகாணத்திலுள்ள சான் பெர்னார்டினோ நகரின் தொடக்கப் பள்ளியில் நுழைந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர், மாணவர் என இருவர் பலியாகினர்.
மேலும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில், "சுட்டு கொல்லப்பட்ட ஆசிரியர் எலைன் ஸ்மித் (53) சான் பெர்னார்டினோ தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரின் மனைவி. சில மாதங்களுக்கு முன்னர்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 வயது மாணவர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 9 வயது மாணவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சான் பெர்னார்டினோவில் சேவை மையம் ஒன்றில் நடத்தப்பட்ட கணவன் - மனைவி இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியாகினர். 22 பேர் காயமடைந்தனர் என்று குறிப்பிடத்தக்கது.