

சிரியாவில் போர் நிறுத்தத்தை அமல் செய்ய அமெரிக்காவும் ரஷ்யாவும் புதிய உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.
சிரியாவில் பலமுனை உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத், டமாஸ்கஸை தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த மிதவாத எதிர்க்கட்சிகள் அலெப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றன.
இவர்கள் தவிர ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவின் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அல்-காய்தா ஆதரவு அமைப்பான அல்-நஸ்ரா குறிப்பிட்ட சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இவர்களுக்கு மத்தியில் குர்து இன மக்கள் தனிப் பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.
மிதவாத எதிர்க்கட்சிகள், குர்து இன மக்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. இதற்குப் போட்டியாக அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் நேரடியாக களத்தில் போரிட்டு வருகிறது.
அண்மைகாலமாக ரஷ்யாவின் ஆதரவால் அதிபர் ஆசாத்தின் கை ஓங்கி வருகிறது. அவரது தலைமையிலான அரசுப் படைகள் அலெப்போ நகரை முற்றுகையிட்டு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தப் பின்னணியில் சிரியா உள்நாட்டுப் போர் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரவும் ஜெனீவாவில் நேற்றுமுன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 13 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.
அதன்படி மிதவாத எதிர்க்கட்சி தரப்புக்கும் அதிபர் ஆசாத் படைகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதேநேரம் அல்நஸ்ரா, ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டன. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் ஜான் கெர்ரியும் செர்ஜி லாரவும் கையெழுத்திட்டனர். வரும் 12-ம் தேதி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது.