Published : 29 Mar 2016 12:24 PM
Last Updated : 29 Mar 2016 12:24 PM

எகிப்தில் பயணிகள் விமானம் கடத்தல்: வெளிநாட்டவர் 4 பேர், விமான சிப்பந்திகள் மட்டும் சிறைபிடிப்பு- மற்றவர்கள் விடுவிப்பு

எகிப்து நாட்டுக்குச் சொந்தமான 'எகிப்து ஏர்' பயணிகள் விமானம் ஒன்று அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து கெய்ரோ நகருக்கு செல்ல வேண்டிய விமானம் கடத்தப்பட்டுள்ளது.

விமான வலுக்கட்டாயமாக சைப்ரஸ் நாட்டின் லார்னகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில், விமானத்தில் இருந்த வெளிநாட்டவர் 4 பேர், விமான சிப்பந்திகள் தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக எகிப்து ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமான கடத்தலும்.. அடுத்தடுத்த நிகழ்வுகளும்:

இன்று (செவ்வாய்க்கிழமை) எகிப்து நாட்டுக்குச் சொந்தமான 'எகிப்து ஏர்' பயணிகள் விமானம் ஒன்று அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து கெய்ரோ நகருக்கு கடத்தப்பட்டது. எகிப்து நாட்டு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் இத்தகவலை உறுதி செய்தது.

விமான கடத்தல் குறித்து சைப்ரஸ் தகவல் ஒளிபரப்பு நிறுவனம், "கடத்தப்பட்ட விமானத்தில் 55 பயணிகளும் விமான சிப்பந்திகள் 5 பேரும் இருந்தனர். விமான கடத்தலில் ஒரே ஒரு ஆயுதம் ஏந்திய நபர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது" எனத் தெரிவித்தது.

விமானத்தில் வெடிகுண்டுகள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது எனவும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

இதற்கிடையில், எகிப்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எகிப்து ஏர் விமானம், எம்.எஸ்.181 கடத்தப்பட்டுள்ளது. அதில் 55 பயணிகளும், 5 விமான சிப்பந்திகளும் இருந்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டவர் மட்டும்..

கடத்தல்காரரிடம் எகிப்துஏர் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முதற்கட்டமாக பெண்கள், குழந்தைகளை விடுவிக்க கடத்தல்காரர் ஒப்புக் கொண்டார். தொடர்ந்து வெளிநாட்டவர் மற்றும் விமான சிப்பந்திகள் தவிர அனைவரையும் விடுவிக்க கடத்தல் நபர் ஒப்புக்கொண்டார். தற்போது, வெளிநாட்டவர் தவிர அனைவரையும் விடுவிக்கப்பட்டுவிட்டனர். இதையும் எகிப்து ஏர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. எகிப்து ஏர் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடத்தல்காரர் தீவிரவாதி அல்ல:

எகிப்துஏர் விமானத்தை கடத்திய நபர் தீவிரவாதி அல்ல என சைப்ரஸ் நாட்டு அதிபர் நிகோஸ் அனாஸ்டாஸியேட்ஸ் தெரிவித்துள்ளார். கடத்தல் காரர் எகிப்தைச் சேர்ந்தவர். அவரது பெயர் இப்ரஹிம் சமஹா எனத் தெரியவந்துள்ளது. அவர் அலெக்ஸாண்ட்ரியா பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவத் துறை பேராசிரியர் எனவும் தெரியவந்துள்ளது. எகிப்து நாட்டு அரசு செய்தி நிறுவனம் இதை உறுதி செய்துள்ளது.

சொந்தப் பிரச்சினைக்காக கடத்தலா?

தனது சொந்த பிரச்சினைக்காக இப்ரஹிம் சமஹா விமானத்தை கடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவருடைய முன்னாள் மனைவி சைப்ரஸ் நாட்டில்தான் வசித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x