Published : 23 Oct 2013 10:48 AM
Last Updated : 23 Oct 2013 10:48 AM

எல்லை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியா-சீனா கையெழுத்து

எல்லையில் அமைதியையும் ஸ்திரத்தன்மை யையும் ஏற்படுத்த எல்லைப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சீனப் பிரதமர் லீ கெகியாங் ஆகியோர் முன்னிலையில் எல்லைப் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட 9 ஒப்பந்தங்கள் புதன்கிழமை கையெழுத்தானது.

இந்நிகழ்ச்சியின்போது, நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் மன்மோகன் சிங் கூறியதாவது: “எல்லைப் பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான் இருநாடுகளின் உறவு மேம்படு வதற்கு அடிப்படையானது என்பதை இருதரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளோம். எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பத ற்கான நடவடிக்கைகளில் இக்கொள்கை தான் வழிகாட்டியாக இருக்கும்.

பிற நாடுகள் தொடர்பாக இந்தியாவும் சீனாவும் கொண்டுள்ள வெளியுறவுக் கொள்கைகள், பிரச்சினையை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். இருநாடுகளுக்கும் இடையேயான பொதுவான நலன்கள் தொடர்பாக பரஸ்பரம் புரிதலுடன் செயல்பட வேண்டும் என சீனப் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

எல்லையில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்த எல்லைப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான உறவில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்தால்தான், பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். இருநாடுகளுக்கும் இடையேயான பொருளாதார சமன்பாடு நிலையற்றதாக இருப்பதை சீனப் பிரதமர் லீ கெகியாங்கிடம் சுட்டிக் காட்டினேன். கடந்த முறை அவர் டெல்லி வந்திருந்தபோது, இந்தியாவில் சீன முதலீட்டை அதிகரிப்பதற்காக தொழில் பூங்கா அமைக்கும் யோசனையை தெரிவித்தார். அதை, நாங்கள் ஏற்கெனவே வரவேற்றுள்ளோம். அதே போன்று வங்கதேசம், இந்தியா, சீனா, மியான்மருக்கு இடையே பொருளாதார ரீதியாக ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம்.

சீனாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள எல்லைப் பாதுகாப்பு, சாலைப் போக்குவரத்து, நதி நீர், மின்உற்பத்தி சாதனங்கள், கலாச்சார பரிமாற்றம், நாளந்தா பல்கலைக்கழகம் அமைத்தல் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் ஒத்துழைப்பை அதிகரிக்கும்” என்றார் மன்மோகன் சிங்.

முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு

சீனப் பிரதமர் லீ கெகியாங் கூறுகையில், “தென்மேற்கு சீனப் பகுதியில் இருதரப்பும் இணைந்து தீவிரவாதிகளுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள், சர்வதேச மற்றும் பிராந்திய கடல் பகுதியில் இருநாடுகளுக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பு ஆகியவை தீவிரவாதத்தை கட்டுப்படுத்த உதவும்.

கட்டமைப்புத் துறையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம்.

தங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினையை சமாளித்து, உறவை மேம்படுத்த மிகவும் பழமையான நாகரிகங்களைக் கொண்டுள்ள இருநாடுகளின் மக்களுக்கும் அறிவாற்றல் உள்ளது. கடந்த மே மாதம் டெல்லிக்கு சென்று மன்மோகனை சந்தித்தேன். அதைத் தொடர்ந்து நடைபெறும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இது. இந்த மாத தொடக்கத்தில் இந்திய கிழக்குக் கடல் பகுதியில் கப்பலில் சென்ற 17 சீன மாலுமிகள் நீரில் சிக்கி தத்தளித்தனர். அவர்களை இந்திய கடற்படை மீட்டது. அதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறப்பு விருந்து

மன்மோகன் சிங்கிற்கு பெய்ஜிங்கில் சிவப்புக் கம்பள வரவேற்பும் ராணுவ மரியாதையும் அளிக்கப்பட்டன. அதன் பின், மன்மோகனுக்கு சீனப் பிரதமர் லீ கெகியாங் விருந்தளித்தார். அதில், ராணுவ இசைக் குழுவினர் பாலிவுட் திரைப்படப் பாடல்களையும் மேற்கத்திய பாடல்களையும் இசைத்தனர். விருந்தில் பாரம்பரிய சீன உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

பின்னர், பெய்ஜிங்கில் உள்ள மிங் மற்றும் குவிங் அரச வம்சத்தினரின் அரண்மனையை பிரதமர் மன்மோகனுக்கு லீ கெகியாங் சுற்றிக் காண்பித்தார்.

மன்மோகனை முன்னாள் பிரதமர் வென் ஜியாபோவும் வரவேற்றார். தங்கள் நாட்டுக்கு அரசுமுறைப் பயணமாக வரும் வெளிநாட்டுத் தலைவர்களை, சீனாவின் முன்னாள் தலைவர்கள் சந்திப்பது அரிதான நிகழ்வாகும். 9 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங்குடன், வென் ஜியாபோ, பிரதமராக இருந்தபோது சிறந்த நட்புறவை கொண்டிருந்தார். அதை வெளிப்படுத்தும் விதமாகவே அவரின் சந்திப்பு அமைந்தது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x