

பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி விசா கேட்டு விண்ணப்பித்தால் அதை வரவேற்கிறோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஜென் சாகி கூறினார்.
“இந்தியாவின் எல்லா தலைவர்களையும் அமெரிக்கா வரவேற்றுள் ளது. இந்தியாவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் எந்தவொரு தலைவரும் அமெரிக்காவின் கூட்டாளி” என்று அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா பிஸ்வால் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அண்மையில் கூறினார். மோடி பிரதமராக தேர்ந் தெடுக்கப்பட்டால் அவருக்கு விசா வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தி ருந்தார்.
இந்நிலையில் நிஷாவின் கருத்து தொடர்பான கேள்விக்கு அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி வெள்ளிக்கிழமை கூறுகையில், “அமெரிக்கா – இந்தியா இடையி லான வலுவான உறவை அவர் பிரதிபலித்திருக்கலாம் என்று கருதுகிறேன். குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்கப் படும் என்று அவர் கூறவில்லை.
தற்போதைய நிலையில் இந்தியாவில் தேர்தல் முடிய வில்லை என்றாலும் மோடி தொடர்பான எங்கள் நிலையில் மாற்றமில்லை. விசா கேட்டு அவர் விண்ணப்பித்தால் வரவேற்கிறோம். வழக்கமான நடைமுறை களின்படி அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்” என்றார்.
“அவர் விண்ணப்பித்தால் விசா வழங்குவீர்களா? என நிருபர்கள் மீண்டும் கேட்டதற்கு, “விசா பணிகள் மிகவும் நம்பிக்கைக் குரியவை. இதை நான் முன் கூட்டியே கணித்து கூற முடியாது” என்றார் அவர்.
குஜராத்தில் 2002-ல் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து நரேந்திர மோடியின் விசாவை அமெரிக்கா ரத்து செய்தது. இந்நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெல், மோடியை அவரது இல்லத்தில் கடந்த மாதம் சந்தித்துப் பேசினார். அமெரிக்க வெளியுறவுத் துறையின் வருடாந்திர மனித உரிமை அறிக்கையிலிருந்து மோடியின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது.