

கைது நடவடிக்கையின்போது ஆடைகளைக் களைந்து சோதனையிடலாம் என்ற அமெரிக்க உச்ச நீதிமன்ற உத்தரவால் அப்பாவிகள் பலர் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நியூயார்க்கில் பணியாற்றிய இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே சில நாள்களுக்கு முன்பு விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அமெரிக்க போலீஸார் அவரது ஆடைகளைக் களைந்து சோதனையிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2005-ல் ஆல்பர்ட் பிளாரன்ஸ் என்ற அமெரிக்கர் தனது மனைவியுடன் காரில் சென்றார். காரை அவரது மனைவி ஓட்டினார். அப்போது வேகமாக கார் ஓட்டியதற்காக அவரது மனைவியை போலீஸார் பிடித்தனர். இந்த வழக்கில் 6 நாள்களுக்கு பின் ஆல்பர்ட் பிளாரன்ஸை விசாரித்த போலீஸார் அவரது ஆடைகளைக் களைந்து சோதனையிட்டனர்.
“போலீஸ் பிடியில் இருந்தபோது உட்காரவும் தும்முவதற்கும்கூட போலீஸார் அனுமதிக்கவில்லை. தன் மீது எந்த வழக்கும் இல்லாத நிலையில் எந்தத் தவறும் செய்யாத நிலையில் போலீஸார் மிகவும் இழிவாக நடத்தினர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முரண்பட்ட கருத்து
கைது நடவடிக்கையின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய விதிகள் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரலில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது ஆடைகளைக் களைந்து சோதனையிடு வதை ஆதரித்து 4 நீதிபதிகளும் எதிர்த்து ஒரு நீதிபதியும் கருத்து தெரிவித்தனர். முரண்பட்ட கருத்துகளுடன் அப்போது அளிக்கப்பட்ட தீர்ப்பால் இப்போது அப்பாவிகள் பலர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மனித உரிமைகள் மீறல் என்ற பெயரில் உலக நாடுகளின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா, சொந்த மண்ணில் அரங்கேற்றும் மனித உரிமை மீறல்களை உலக அரங்கில் அம்பலப்படுத்த வேண்டும் என்று பன்னாட்டு சமூக ஆர்வலர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.-பி.டி.ஐ.