

மலேசியாவில் பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடன் சுமையைக் குறைப்பதற்காக ஏற்கெனவே போராடிவரும் அந்நாட்டு அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சுதந்திர சதுக்கம் பகுதியில் போலீஸாரின் எச்சரிக்கையை மீறி செவ்வாய்க்கிழமை மாலை ஆயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு டீ-ஷர்ட் மற்றும் முகமூடி அணிந்திருந்த அவர்கள் 'விலை வாசியைக் கட்டுப்படுத்து', 'எங்கள் உரிமையைப் பறிக்காதே' என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி கோஷம் எழுப்பினர்.
இந்தப் போராட்டம் நள்ளிரவு வரை நீடித்ததால் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டம் பாதியில் கை விடப்பட்டது. நள்ளிரவுக்குப் பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது. இதில் சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்றதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத் தலைவர் புகைரி சோபியான் கூறுகையில், "இந்தப் போராட்டம் ஒரு சமிக்ஞைதான். இதன்மூலம் அரசு மக்களின் கோபத்தை உணர்ந்து, கோரிக்கையைப் பரிசீலிக்கும் என்று நம்புகிறோம். நாட்டில் முறைகேடு அதிகரித்து விட்டது. கோரிக்கையை ஏற்காவிட்டால் போராட்டம் தொடரும்" என்றார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் நஜிப் ரஸாக் தலைமையிலான தேசிய முன்னணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. கடந்த 55 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் இந்த கூட்டணி அரசு, கடன் சுமையைக் குறைக்க முடியாமல் போராடி வருகிறது. பிரதமர் நஜிப் விடுத்துள்ள புத்தாண்டு செய்தியில் "பெட்ரோல் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருள்களுக்கான மானியச் செலவு பெரும் சுமையாக உள்ளது. எனவே, இவற்றுக்கான மானியம் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் நிதிநிலையை கட்டுக்குள் வைப்பதற்கான இதுபோன்ற நடவ டிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
விலை உயர்வு
கடந்த 2010 செப்டம்பர் முதல் மேற்கொள்ளப்பட்ட மானியக் குறைப்பு நடவடிக்கையால் பெட்ரோல் 10.5 சதவீதமும், மின் கட்டணம் 15 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆசிய பிராந்தியத்தில் கடனுக்கும் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கும் (ஜிடிபி) இடையிலான விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் மலேசியாவும் ஒன்றாக விளங்குகிறது. எனவே, நிதி நிலையை சீரமைக்க வேண்டும் என 'பிட்ச்' தர நிர்ணய நிறுவனம் கடந்த ஜூலை மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தது.