

தென்கொரியாவுடன் சேர்ந்து கொண்டு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்-ஐ கொலை செய்ய அமெரிக்காவின் சிஐஏ திட்டமிட்டு வருவதாக வடகொரியா கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, சிஐஏ மற்றும் சியோல் உளவுச்சேவை அமைப்பு அடையாளம் தெரியாத ரசாயனத்தைப் பயன்படுத்தி அதிபரைக் கொலை செய்ய திட்டமிட்டு வருகின்றனர். சிஐஏ-வுக்கு கதிர்வீச்சு, நுண் நச்சு வேதிப்பொருள், ரசாயனம் ஆகியவற்றைக் கொண்டு அதிபரைக் கொலை செய்வதென்பது கைவந்த கலை. அதாவது இந்தவகையில் 6 அல்லது 12 மாதங்கள் சென்ற பிறகு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் விதமாக திட்டமிடப்படுவதாக குற்றம் சாட்டுகிறது வடகொரியா. இது குறித்து அரசு இதழில் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
”ஜனநாயக மக்கள் குடியரசுக் கொரியாவின் கொள்கை ரீதியாக கறைபடிந்த மற்றும் கிம் என்று அழைக்கப்படும் குடிமகனுக்கு லஞ்சம் அளித்து அவர் மூலம் அதிபர் ஜோங் மீது இத்தகைய தாக்குதலை நடத்த திட்டமிட்டனர். அமெரிக்க, சிஐஏ பயங்கரவாதிகளின் மற்றும் அமெரிக்காவின் பொம்மை ஐஎஸ்-ஆன தென் கொரியாவின் இந்த முயற்சிகளை அடித்து நொறுக்குவோம். இந்த கொலை முயற்சி போர் அறிவிப்புக்குச்சமமாகும்
சமீபத்தில் நாங்கள் கண்டுபிடித்த இத்தகைய கொடூரமான குற்றம் ஒரு வகையான பயங்கரவாதமாகும்” என்று பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது.
ஆனால் தான் குற்றச்சாட்டும் இந்தச் சதியை எப்படி முறியடித்தோம் என்று வடகொரியா குறிப்பிடவில்லை. இதனையடுத்து வடகொரியா நெடுகிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.