

நியூயார்க் நகரத்தை விட மூன்று மடங்கு பெரிய நகரத்தை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுச்சூழல் மாசு மற்றும் நெரிசலை தவிர்க்க சீனா இத்தகைய நகரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக சீன அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சினுவா செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சினுவா வெளியிட்ட செய்தியில், "சீனாவின் அதிகாரமிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்ற கூட்டத்தில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் பெரிய நகரம் உருவாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய நகரம் நியூயார்க் நகரத்தை விட 3 மடங்கு பெரியதாக இருக்கும் என்று கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய நகரம் உருவாக்கப்படுவது குறித்து சீன அதிபர் ஜி ஜின்பங் கூறும்போது, "புதிதாக உருவாக்கப்படும் இந்த நகரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படடும். மேலும் மக்களின் வாழ்வை மேம்படுத்தக் கூடியதாக இந்நகரம் இருக்கும்" என்றார்.