

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 16 வயது சிறுவனை அந்த நாட்டு சிறார் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீனில் விடுதலை செய்தது.
அந்தச் சிறுவன் வழக்கு விசாரணைக்கு பெரிதும் உதவி வருவதாக போலீஸார் கூறியதன்பேரில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்து வந்த இந்திய மாணவர் மன்ராஜ்விந்தர் சிங்கையும் (20) அவரது நண்பரையும் 8 பேர் கொண்ட கும்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடூரமாகத் தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த மன்ராஜ்விந்தர் சிங் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 3 சிறுவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் 16 வயது சிறுவனுக்கு மட்டும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இரவில் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது, பழைய நண்பர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் அந்தச் சிறுவனுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.