

அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய துணைத்தூதர் தேவயானி கோப்ரகடே மீதான விசா மோசடி குற்றச்சாட்டை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தனக்கு எதிரான விசா மோசடி வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், மான்ஹாட்டன் நீதிமன்ற அரசு தரப்பு வழக்கறிஞர் பிரீத் பஹாரா, தேவயானி கோப்ரகடே மீதான குற்றச்சாட்டு பதிவதை நிறுத்தக் கோரிய மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தேவயானி சார்பில் அவரது வழக்கறிஞர் டேனியல் அர்ஷாக் பதில் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில்; தன் மீதான குற்றச்சாட்டு, தனக்கு முழுமையான தூதரக பாதுகாப்பு அளிக்கப்பட்ட பின்னர் தான் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்றும், முழுமையான தூதரக பாதுகாப்பு அளிக்கப்பட்ட பிறகு அமெரிக்காவுக்கு தன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய அதிகாரம் இல்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இத்தகைய சூழலில், மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஷிரா ஸ்கெயிண்டிலின் அளித்த தீர்ப்பில், தேவயானி மீதான விசா மோசடி குற்றச்சாட்டை தள்ளுபடி செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
14 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், "தேவயானி கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி பிற்பகல் 5.47 மணிக்கு முழுமையான தூதரக பாதுகாப்பை பெற்றிருக்கிறார் என்பதில் எந்தவித குழப்பமும் இல்லை. ஆனால், அவர் மீது ஜனவரி 9-ம் தேதியே குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தேவயானிக்கு முழு தூதரக பாதுகாப்பு இருந்த போது பதியப்பட்ட விசா மோசடி குற்றச்சாட்டு தள்ளுபடி ஆகிறது" என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா வரவேற்பு:
தேவயானி மீதான குற்றச்சாட்டு அமெரிக்க நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருப்பதை வரவேற்பதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், 14 பக்கங்கள் கொண்ட தீர்ப்பினை வழக்கறிஞர்கள் ஆய்வு செய்து வருவதாகவும், அதன் பிறகே தீர்ப்பு குறித்து முழுமையாக கருத்து தெரிவிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
இந்திய அரசுக்கு தேவயானி தந்தை நன்றி:
தேவயானி மீதான குற்றச்சாட்டு நீக்கப்பட்டிருக்கும் நிலையில், இவ்விகாரத்தில் தொடர்ந்து ஆதரவு அளித்துவந்த இந்திய அரசுக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார். தேவயானியை சிக்கவைக்கவே தவறான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.