Last Updated : 19 Nov, 2013 12:00 AM

 

Published : 19 Nov 2013 12:00 AM
Last Updated : 19 Nov 2013 12:00 AM

ஏழாயிரம் பேருக்கு இன்பச் சுற்றுலா

கிழக்கு லிபியாவின் தனியாவர்த்தனக் கச்சேரி குறித்து சில தினங்கள் முன்பு இங்கு எழுதியது நினைவிருக்கும். கடத்திப் போகப்பட்ட அதிபர் பெருமானின் கள்ள மௌனம் குறித்தும் கொஞ்சம் சிந்தித்தோம்.

இப்போது லிபியாவுக்கான அமெரிக்காவின் சிறப்பு ராணுவ அதிகாரி வில்லியம் மெக்ராவன் திடுதிப்பென்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் ஏழாயிரம் லிபிய வீரர்களுக்கு அமெரிக்கா போர்ப்பயிற்சி அளிக்கும். இப்பயிற்சியானது லிபியாவில் அல்லாமல் ஏதேனும் ஒரு ஐரோப்பிய தேசத்தில் வைத்து அளிக்கப்படும். புறப்படுங்கள் வீரர்களே. அழகான ஐரோப்பாவைக் கண்டுகளித்துத் திரும்பலாம்.

எப்படியானாலும் லிபியாவைச் சும்மா விடுவதில்லை என்று அமெரிக்கா முடிவு செய்துவிட்டது. உள்நாட்டு யுத்த காண்ட்ராக்டர்களை மொத்தமாக ஒழித்துக் கட்டுவது என்னும் கண்ணுக்கெட்டிய வரை எல்லை தென்படாத செயல்திட்டத்தை முன்னால் வைத்துக்கொண்டுவிட்டால் போதுமானது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் டான்ஸ் ஆடலாம். பிரதமர் என்ன சொல்லப் போகிறார்? நரி வலம் போனாலும் இடம் போனாலும் அது, அதனிஷ்டம். மேலே விழுந்து பிடுங்காத வரைக்கும் எனக்கொரு சங்கடமும் இல்லை. ததாஸ்து.

இது இழுக்கும், எப்படியும் ஒரு இரண்டு மூன்று வருஷங்கள். நாளொரு குண்டு வெடிப்பு, பொழுதொரு படுகொலை என்று லிபியா மேலும் மேலும் ரணகளமாகத்தான் போகிறது. திரும்பத் திரும்ப அமெரிக்க உதவி கோரப்படுகிற வரையில் இதற்கு விமோசனம் என்ற ஒன்றில்லை. இராக்கிலும் ஆப்கனிஸ்தானிலும் யுத்தம் முடிந்தது என்று சொல்லப்பட்ட திருநாளுக்கு மறு நாளில் இருந்துதான் ஏராளமான பிணங்கள் விழுந்துகொண்டிருக்கின்றன என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் இன்னோரன்ன பிராந்தியங்களில் அமெரிக்காவின் முதன்மைச் செயல்திட்டம் என்னவென்று ஒருவாறு புரியவரும்.

லிபிய பிரிவினைவாதிகளின் கோரிக்கை இதர தேசங்களில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களின் கோரிக்கை போன்றதல்ல. அந்தந்தப் பிராந்தியங்களில் உள்ள எண்ணெய் வளம் கொடுக்கும் லாபத்தில் நியாயமான பங்கு சம்மந்தப்பட்ட பிராந்தியத்துக்கே வழங்கப்படவேண்டும், செலவிடப்பட வேண்டும் என்பதுதான் அடிப்படை. கடாஃபி இருந்த காலத்தில் இந்தக் குரலெல்லாம் எலி வளைக்குள் பதுங்கியிருந்தன. உண்மையைச் சொல்வதென்றால், அவரது மறைவுக்குப் பிறகுதான் லிபியாவின் எண்ணெய் பலம் குறித்து மக்களுக்கே ஓரளவு சரியான விவரங்கள் தெரியவந்தன.

கடாஃபி, எண்ணெய்க் கிணறுகள் கொடுக்கும் லாபத்தைக் குறித்துப் பேசியதில்லை. ஆனால் மக்களுக்கு அவ்வப்போது அதிரடியாக என்னவாவது நல்லது செய்து குஷிப்படுத்தி விடுவார். அவரைத் தூக்கிக் கடாசிவிட்டு அமெரிக்கா உட்காரவைத்த ஆட்சியாளர்களுக்கு அதற்கு சாமர்த்தியம் பத்தவில்லை. தவிரவும் மக்களுக்குச் செய்வது என்பது குறித்துச் சிந்திக்கவும் அவர்களுக்கு நேரமில்லாமல் போய்விட்டது. இதன் விளைவாகத்தான் பிரிவினை கோரிக்கைகள் லிபியாவில் தலைவிரித்தாடத் தொடங்கின.

இந்தப் பிரிவினைவாதிகள் அந்தந்தப் பிராந்தியத்து மக்களின் பிரதிநிதிகள்தாம் என்பதைச் சுலபமாக மறந்துவிடுகிறார்கள். கிழக்கு லிபியா தன்னாட்சி புரிவதாக அறிவித்துக்கொண்டு தனிக்கொடி பறக்கவிட்டபோது உலகம் இதை வெளிப்படையாகக் கண்டது. தனிப்பெயர், தனிக்கொடி வைத்துக்கொண்ட எந்தப் போராளி இயக்கம் ஆட்சியைப் பிடித்தது? ஒரு புண்ணாக்குமில்லை. அந்தப் பிராந்தியத்தில் பல்லாண்டு காலமாக அரசியல் செய்து வந்தவர்கள்தாம் இன்று அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறார்கள். ஆயுததாரிகள் அவர்களுக்கு உதவி செய்தார்கள். இன்று ஆட்சியிலும் பங்கேற்றிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

கிழக்கு லிபியா என்றில்லாமல் தேசம் முழுதுமே இதுதான் நிலைமை. எடுக்கிற எண்ணெயில் கிடைக்கிற பணத்தில் கொடுக்கிறேன் உனக்கு சரி பங்கு என்று சொல்லிவிட்டாலே இந்தப் புரட்சிகள் ஓய்ந்துவிடும். ஆனால் அதைச் செய்யத்தான் யாருக்கும் மனசு வர மறுக்கிறது.

டிசம்பரில் அமெரிக்கா அறிவித்திருக்கும் போர்ப்பயிற்சிகள் எப்படியும் ஆரம்பமாகிவிடும். பயிற்சிக்குப் போகும் ஏழாயிரம் பேரில் கால்வாசி நபர்களாவது பயிற்சி பெற்று வந்தபிறகு அதே அமெரிக்கப் படைகளுக்கும் அதே லிபிய அரசுக்கும் எதிராக அதே ஆயுதத்தைத் திருப்பிக் காட்டத்தான் போகிறார்கள்.

உனக்குமில்லை எனக்குமில்லை இழுத்து மூடு எண்ணெய்க் கிணறுகளை என்று வெறுத்துப் போய் வெடிக்கிற எல்லை வரை கொண்டுபோகாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x