

வடகொரியா விவகாரத்தில் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் கட்டுபாட்டுடன் இருக்குமாறு சீனா அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று (திங்கட்கிழமை) அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசியதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் ஜி ஜின்பிங், ட்ரம்ப்பிடம் "கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு வடகொரியாவுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்" என்று கூறியதாக கூறப்பட்டுள்ளது.
இம்மாதத்தில் ஜி ஜின்பிங் மற்றும் ட்ரம்ப் ஃபுளோரிடாவில் நடத்திய சந்திப்பிக்கு பிறகு இரு தலைவர்களிடையே நடைபெறும் இரண்டாவது தொலைப்பேசி உரையாடல் இதுவாகும்.
முன்னதாக வட கொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலையில் வாரந்தோறும் ஏவுகணை சோதனை நடத்தப்போவதாக வடகொரியா கூறியிருந்தது.
இதனைத் தொடர்ந்து கொரிய தீபகற்பப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.