Published : 02 Apr 2017 09:54 AM
Last Updated : 02 Apr 2017 09:54 AM

உலக மசாலா: ஐயோ, உலகிலேயே பாவப்பட்ட குதிரைகள்...

போலந்து நாட்டின் பால்டிக் கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சூரியக் குளியல் எடுப்பவர்கள் தங்களுக்கென்று தனி இடத்தை ஒரு துணியால் மறைத்துக்கொள்கின்றனர். கடற்கரை முழுவதும் பல வண்ணத் துணிகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. “போலந்து கடற்கரையில் ஒவ்வொரு குடும்பமும் துணிகளைத் தடுப்புகளாக வைத்து, தங்கிக்கொள்வது பல காலமாகவே நடைபெற்று வருகிறது. ஆனால் சமீபத்தில்தான் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு மக்கள் குவிவார்கள். தங்கள் பொருட்களைப் பத்திர மாகப் பாதுகாப்பதும் நிம்மதியாகச் சூரியக் குளியல் எடுப்பதும் கஷ்டமாக இருக்கும். அதனால் அவரவர் வசதியைக் கருத்தில் கொண்டு நீண்ட துணிகளை இரும்புக் கம்பிகளில் கட்டி, தடுப்புகளை அமைத்துக்கொள்கிறோம். கடற்கரையில் மணலே தெரியாமல் வண்ணத் துணிகளாகவே தெரியும் அளவுக்கு எல்லோரும் தடுப்பு களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அடிக்கடி இங்கு வேகமாகக் காற்று வீசும். அப்போது உடல் முழுவதும் மணலாகிவிடும். தடுப்புகளால் மணல் பறப்பதும் தடுக்கப்படுகிறது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் முதலில் தடுப்புகளைக் கண்டு திகைத்தாலும் வேறுவழியின்றி அவர்களும் தடுப்புகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுகின்றனர். சீசன் காலங்களில் இடம் கிடைப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது. தடுப்புத் துணிகள் விற்பனை ஒரு தொழிலாக மாறிவிட்டது. மணிக்கணக்கில் வாடகைக்குத் தடுப்புகளை எடுத்துக்கொள்ளலாம்” என்கிறார் போலந்து பயணி அலெக்ஸி.

வண்ணக் கடற்கரை!

வீடுகளில் வளர்க்கப்படும் குதிரைகளின் குளம்புகள் சில வாரங்களுக்கு ஒருமுறை அளவாக வெட்டிவிடப்படுகின்றன. பெல்ஜியத்தின் வல்லோனியா பகுதியில் வளர்க்கப்பட்ட இரு குதிரைகள் மிக மோசமான நிலையில் விலங்குகள் பாதுகாப்பு மையத்தினரால் மீட்கப்பட்டிருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக குதிரைகளின் குளம்புகள் வெட்டப்படாமல், மிகப் பெரிதாகவும் வளைந்தும் வளர்ந்திருக்கின்றன. இதனால் குதிரைகளால் இயல்பாக நடக்கவே முடியவில்லை. தடுமாறி விழுவதால் கால் முட்டிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. போதுமான உணவுகள் வழங்கப்படாததால் உருவமும் சிறுத்து, ஆரோக்கியமும் குன்றி காணப்படுகின்றன. இந்தக் குதிரை பற்றிய தகவல்கள் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் விரைந்தனர். உரிமையாளர் ஏன் இப்படிக் குதிரையை வைத்திருந்தார் என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை. அருகில் இருந்தவர்கள் இவர் குதிரை வளர்ப்பதே தெரியாது என்கிறார்கள். “நாங்கள் இதுவரை இந்த மாதிரி விலங்குகளை மீட்டதில்லை. பத்து ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல், குதிரைகளுக்குச் சரியாக உணவும் அளிக்காமல் ஏன் இப்படி நடந்துகொண்டார் என்று புரியவில்லை. 205 கிலோ எடை இருக்க வேண்டிய குதிரைகள் 63 கிலோதான் இருந்தன. இன்னும் சில நாட்களில் இறந்து போகும் நிலையில் இருந்த குதிரைகளை மீட்டுவிட்டோம். தொடர்ந்து மருத்துவம் செய்து வருகிறோம். முன்னேற்றம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஆனால் சாதாரணமான குதிரைகளைப் போல இந்தக் குதிரைகளால் இனி நடக்கவே முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்” என்கிறார் மீட்பு மையத்தைச் சேர்ந்த அதிகாரி.

ஐயோ, உலகிலேயே பாவப்பட்ட குதிரைகள்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x