

‘எந்த ஒரு அயல்நாட்டு தாக்குதலிலும் சீனா பாகிஸ்தான் பக்கமே நிற்கும்’ என்று பாகிஸ்தானில் சீன தலைமை தூதர் யூ போரென் கூறியதாக வந்த செய்திகளை ‘தெரியாதே;’ என்று மறுத்துள்ளது சீனா.
பாகிஸ்தான் பஞ்சாப் முதல்வர் அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், சீன தலைமை தூதர் யூ போரென், “எந்த ஒரு அயல்நாட்டு தாக்குதல் விவகாரத்திலும் பாகிஸ்தானுக்கே சீன ஆதரவு” என்று கூறியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த செய்தி பற்றி சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளரிடம் கேட்ட போது, “நீங்கள் கூறும் விவகாரம் பற்றி எனக்குத் தெரியவில்லை” என்று மறுத்துள்ளது.
பாகிஸ்தான் ஊடகம் டான் செய்திகளில் சீன தலைமை தூதர் யூ போரென், பஞ்சாப் முதல்வர் ஷாபாஸ் ஷெரிப்பிடம் இவ்வாறு கூறியதாக வெளியானது.
மேலும் ‘காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பக்கமே நாங்கள் நிற்கிறோம். நிராயுதபாணிகளான காஷ்மீரிகள் மீதான வன்முறைகளுக்கு நியாயம் கற்பிக்க முடியாது. காஷ்மீர் விவகாரம் காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்பவே தீர்வு காணப்படக்கூடியதாகும் என்றும் யூ போரென் கூறியதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இவையெல்லாவற்றையும் மறுத்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம் தற்போது இருதரப்பு அமைதிப்பேச்சுவார்த்தைகளே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு என்பதே தங்கள் நிலைப்பாடு என்று கூறுகிறது.
“வரலாறு விட்டுச் சென்ற விவகாரமே காஷ்மீர் பிரச்சினை, சம்பந்தப்பட்டவர்கள் சுமுக பேச்சு வார்த்தை நடத்தி முறையான தீர்வு காண வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு” என்று பல்டி அடித்துள்ளது.