

அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியை சந்தித்துப் பேசினார்.
இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிரிவு ட்விட்டரில் தெரிவித்துள்ளது. அதேநேரம், இந்த சந்திப்பு தொடர்பாக இருதரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
எனினும், இந்த சந்திப்பு மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக உடன் இருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வெளியுறவுத் துறை துணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ், செயலாளர் நிஷா தேசாய், இத்துறையின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் விண்டி ஷெர்மன் ஆகியோர் உடனிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
4 நாள் அரசு முறைப் பயணமாக ஞாயிற்றுக் கிழமை வாஷிங்டன் சென்றடைந்த சுஜாதா சிங், எரிசக்தித் துறை துணை அமைச்சர் டேனியல் பி.பொன்மேன், பாதுகாப்புத் துறை செயலாளர் (கொள்கை) ஜேம்ஸ் என்.மில்லர், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் டோனி பிளிங்கென், செனட் உறுப்பினர் மார்க் வார்னர் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசினார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான சிறப்புப் பிரதிநிதி ஜேம்ஸ் டாபின்ஸ் மற்றும் செனட் சபையின் வெளியுறுவு விவகாரங்கள் குழு தலைவர் ராபர்ட் மெனண்டிஸ் உள்ளிட்டோரையும் சுஜாதா சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.
இந்திய ராணுவ தலைமைத் தளபதி விக்ரம் சிங் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட உடன் சுஜாதா சிங் அந்நாட்டுக்குச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.