

பாகிஸ்தானின் கான் அணு ஆராய்ச்சி மையத்தில் புதிதாக ஓர் அணு ஆய்வுக்களம் அமைக்கப்படலாம் என சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் அணு ஆயுத அதிகரிப்பு நடவடிக்கைகள், பெரும்பாலும் வணிக செயற்கைக்கோள்களின் புகைப்படங்கள் மூலமாகவே தெரியவருகின்றன.
அணு ஆயுதக்கிடங்குகளை விரிவுபடுத்துவதில் மற்ற நாடுகளைக் காட்டிலும் பாகிஸ்தான் முன்னணியில் இருக்கிறது.
இந்நிலையில், கஹுடா பகுதியில் அமைந்திருக்கும் கான் ஆராய்ச்சி மையத்தில் புதியதொரு அணு ஆய்வுக்களம் மேம்படுத்தப்பட்டு வளர்ந்துவரலாம் என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட வணிக செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன.
லண்டனைச் சேர்ந்த தகவல் கையாளு சேவைகள் நிறுவனமான ஐ.ஹெச்.எஸ். சில முக்கியத் தகவல்களை அளித்திருக்கிறது. அதன்படி, பாகிஸ்தானின் கான் ஆய்வுக்கூடத்தில் புதிதாக வளர்ந்துவரும் ஆய்வுக்களத்தின் புகைப்படங்கள் ஏர்பஸ் பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவன செயற்கைக்கோளால் செப்டம்பர் 28, 2015-ம் ஆண்டில் எடுக்கப்பட்டன.
அதே நிறுவனம் திரும்பவும் ஏப்ரல் 18, 2016-ல் எடுத்த புகைப்படத்தில், புதிய யுரேனிய செறிவூட்டப்பட்ட சிக்கலான ஆய்வுக்கூடம் வளர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
ஆய்வுக்கூடப் பகுதி 1.2 ஹெக்டேர்கள் பரப்பளவு கொண்டதாக இருக்கிறது. கான் ஆய்வு நிறுவனத்தின் பாதுகாப்பான பகுதியில் அமைந்திருக்கும் அணுஆய்வுக்கூடம், தென்மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆய்வுக்கூடம் செவ்வக வடிவத்தில், சுமார் 140 மீட்டர்கள் நீளத்திலும் 80 மீட்டர்கள் அகலத்திலும் அமைந்திருக்கிறது. தாவரங்கள் மற்றும் மரங்கள் அங்கு நிறைந்திருப்பது ஆய்வுக்கூடத்துக்கு அதிகப் பாதுகாப்பைத் தந்துள்ளது.
பாகிஸ்தானின் அணு ஆயுத அதிகரிப்பு நடவடிக்கைகள், பெரும்பாலும் வணிக செயற்கைக்கோள்களின் புகைப்படங்கள் மூலமாகவே தெரியவருகின்றன.
கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சார்ந்த அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம் (ஐஎஸ்ஐஎஸ்) அளித்த அறிக்கையின்படி, பாகிஸ்தான், அணுஆயுத எரிபொருளின் மிச்சத்தைக் கொண்டு புளூட்டோனிய மறுசீராக்கல் ஆலையை பஞ்சாப்பின் சாஷ்மா என்ற இடத்தில் உருவாக்கியது தெரியவந்தது.
பாகிஸ்தானின் அணுஆயுத உருவாக்க தொழில்நுட்பம் லண்டன், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை ஒத்துள்ளதாக ஐ.ஹெச்.எஸ். செயற்கைக்கோள் பட ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
ஆய்வுக்கூடம் குறித்து ஐ.ஹெச்.எஸ்.,பணிகள் குறைந்தது 1 வருடத்துக்கு நீளும் எனவும் ஆய்வுக்கூடம், 2017-ன் இறுதியிலோ அல்லது 2018-ம் ஆண்டின் தொடக்கத்திலோ தயாராகும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது.