Last Updated : 04 Oct, 2014 04:59 PM

 

Published : 04 Oct 2014 04:59 PM
Last Updated : 04 Oct 2014 04:59 PM

தலை துண்டிக்கப்பட்ட பிரிட்டன் உதவிப் பணியாளர் ஆலன் ஹெனிங் ஒரு டாக்ஸி டிரைவர்

சிரியாவில் ஐ.எஸ். இஸ்லாமிய தீவிரவாதிகள் பிரிட்டன் உதவிப் பணியாளர் ஆலன் ஹெனிங் என்பவரின் தலையைத் துண்டித்த வீடியோவை வெளியிட்டதையடுத்து இங்கிலாந்தில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

47 வயதான ஆலன் ஹெனிங் ஒரு டாக்ஸி டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சிரியாவுக்கு சமூக உதவிப்பணியாளராகத் தானாகவே முன்வந்து சென்றவர். அவரது தலையைத் துண்டித்து வீடியோவை வெளியிட்டது ஐ.எஸ். இதனால் பிரிட்டனில் பெரும் பீதி எழுந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் வடமேற்கு சிரியாவில் உள்ள மருத்துவமனைக்கு உதவிப்பொருள் மற்றும் மருந்துகளைக் கொண்டு சென்ற குழுவுடன் ஹெனிங் சென்ற போது ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் 47 வயது ஆலன் ஹெனிங்கிற்கு அஞ்சலி செலுத்தி கூறும் போது, “அவர் அமைதியையும் சமாதானத்தையும் பெரிதும் விரும்புபவர், அன்பை மார்க்கமாகக் கொண்டவர். அவரைக் கொலை செய்ததை மன்னிக்கவே முடியாது, அவரைக் கொலை செய்தது இழிவானது. அர்த்தமற்றது, அவரை இவ்வாறு கொலை செய்து வீடியோவை வெளியிட்டதன் மூலம் நாம் எதனை எதிர்கொண்டுள்ளோம் என்பதைக் காட்டுகிறது.

இது போன்ற கொலைகளுக்கு காரணமானவர்களை நிச்சயம் வேட்டையாடுவோம், அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அது அனைத்தையும் செய்வோம்” என்றார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஆகஸ்டிற்குப் பிறகு கொல்லப்படும் 4வது மேற்கத்திய நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. டெவிட் ஹெய்ன்ஸ் என்ற பிரிட்டன் உதவிப்பணியாளர் முன்னதாக தலை துண்டிக்கப்பட்டு பலியானார், இப்போது 2வது நபர் ஆலன் ஹெனிங்.

ஐ.எஸ்.-இன் இத்தகைய கொடுஞ்செயல்கள், இழி செயல்களுக்கு குரானில் இடமில்லை என்று இமாம்கள் கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

ஹெனிங்கின் நண்பர்கள் கூறுவது என்ன?

ஹெனிங், சிரியாவின் மக்கள் கடுமையாக அவதியுறுவதை தாங்க முடியாமல் ஹெனிங் முஸ்லிம் நண்பர்கள் குழாமில் இணைந்து சிரியா சென்றார்.

அவரைக் கொலை செய்வதற்கு முன்பாக அவரிடம் அளிக்கப்பட்ட தாளில் “இஸ்லாமிக் ஸ்டேட்டை தாக்குவது என்ற நமது நாடாளுமன்றத்தின் முடிவினால், நான் இப்போது பிரிட்டன் மக்களில் ஒருவர் என்ற முறையில் விலை அளிக்க வேண்டியதானது” என்று எழுதியிருந்தது. அதனை ஹெனிங் படித்த பிறகே தலை துண்டிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x