

‘‘என்னை விடவும், முன்னாள் அதிபர் பில் கிளின்டனை விடவும் அதிபர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் ஹிலாரி கிளின்டன்’’ என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பாராட்டி பேசினார்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஹிலாரி போட்டியிடுகிறார். இந்நிலையில், பிலடெல்பியா வில் நடந்த ஜனநாயக கட்சி தேசிய கூட்டத்தில் ஹிலாரியை ஆதரித்து அதிபர் ஒபாமா நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அமெரிக்க ஆட்சியை தகுதிவாய்ந்த ஹிலாரியிடம் ஒப்படைக்க தயாராக இருக்கிறேன். என்னை விடவும், முன்னாள் அதிபரும் அவரது கணவருமான பில் கிளின்டனை விடவும், மற்ற ஆண், பெண்களை விடவும் அதிபர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் ஹிலாரி. அமெரிக்க அதிபராக பதவி வகிப்பதற்கு ஹிலாரி மிகவும் தகுதி வாய்ந்தவர்.
குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் நம்பிக்கை இல்லாதவர். நமது ராணுவத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளார். அவரை மக்கள் புறக்கணிக்க வேண்டும். நம்மிடம் இருப்பவர்களில் மிகச்சிறந்தவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அமெரிக்காவில் என்னுடைய அரசில் அமைச்சராக திறம்பட பணியாற்றியவர் ஹிலாரி. பதவி வகித்தால் என்னென்ன சிக்கல் எழும், அவற்றை எப்படி தீர்க்க வேண்டும் என்று தெரிந்தவர் ஹிலாரி.
இவ்வாறு அதிபர் ஒபாமா பேசினார்.