சிந்து நதி ஒப்பந்த பிரச்சினை: இந்தியா-பாக். பேசித் தீர்க்க வேண்டும்- அமெரிக்கா வலியுறுத்தல்

சிந்து நதி ஒப்பந்த பிரச்சினை: இந்தியா-பாக். பேசித் தீர்க்க வேண்டும்- அமெரிக்கா வலியுறுத்தல்
Updated on
1 min read

சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் தொடர்பான கருத்து வேறுபாடுகளை, இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பர ஒத்துழைப்புடன் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என, அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல் நடவடிக்கைகளை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில், சிந்து நதி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, நீர் வரத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்வதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அண்மையில் மத்திய அரசு அறிவித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் இவ்விஷயத்தில் ஏற்கெனவே மத்தியஸ்தம் செய்த உலக வங்கியின் உதவியை நாடியது. அமெரிக்காவின் ஆதரவைப் பெறும் முயற்சியிலும் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் நிதி அமைச்சர் முகமது இஷாக் தர் உடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இருதரப்பும் பிரச்சினையை பேசித் தீர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், வாஷிங்டனின் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பியிடம் இவ்விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஜான் கிர்பி, ‘கடந்த டிசம்பர் 29-ம் தேதி பாகிஸ்தான் நிதி அமைச்சர் தர் உடன் கெர்ரி பேசினார். அதுகுறித்து மேலும் விரிவாக கூற இயலாது. இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 50 ஆண்டுகளாக அமைதியான ஒத்துழைப்புக்கு எடுத்துக்காட்டாக சிந்து நீர் ஒப்பந்தம் திகழ்ந்து வந்தது.

இதில் ஏதேனும் கருத்துவேறுபாடு எழும் பட்சத்தில், அவ்விரு நாடுகளும் பரஸ்பரம் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். கடந்த காலங்களிலும் அமெரிக்கா இந்த நிலைப்பாட்டையே எடுத்தது’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in