Published : 12 May 2017 09:22 AM
Last Updated : 12 May 2017 09:22 AM

உலக மசாலா: சமாதியில் தூங்கும் மருத்துவர்!

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் வசிக்கும் 92 வயது லியாங் ஃபுஷெங், தன் மரணத்தை எதிர்பார்த்து சமாதியில் காத்திருக்கிறார்! ஒரு காலத்தில் இந்த மருத்துவருக்கு அழகான குடும்பம் இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ நோயால் மனைவியையும் மூன்று குழந்தைகளையும் இழந்துவிட்டார். இவருக்கு யாருமில்லை. கிராமத்தினருக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து, அருகில் இருந்த மலையில் 1990-ம் ஆண்டு ஒரு வீட்டைக் கட்ட ஆரம்பித்தார். செங்குத்தான மரங்கள் சூழ்ந்த மலை என்பதால், கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம். அதனால் வீட்டைக் கட்டி முடிக்க 14 ஆண்டுகள் ஆனது. 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த வீட்டில் ஒரு சமாதியும் இருக்கிறது. தூக்கம் வரும்போதெல்லாம் சமாதிக்குள் தான் உறங்குகிறார். தான் இறந்து போனால், தன் உடலை யார், எப்படிப் புதைப்பது என்ற கவலையை யாருக்கும் தர விரும்பாததால் இந்த முடிவை மேற்கொண்டு வருகிறார். இந்தச் சமாதிக்கு 5 பூட்டுகள் இருக்கின்றன. சமாதியைச் சுற்றி மின்சாரம் செலுத்தப்பட்டிருக்கிறது. இவர் அனுமதியின்றி யாரும் எளிதில் நுழைந்துவிட முடியாத அளவுக்குப் பல விஷயங்களைச் செய்து வைத்திருக்கிறார். ஏற்கெனவே கிராம மக்களுக்குத் தன்னுடைய இறுதி விருந்தை வழங்கிய லியாங், இன்றுவரை தன்னைத் தேடி உதவி கேட்டு வரும் மக்களுக்கு மருத்துவம் பார்க்கிறார்.

மரணத்தை எதிர்பார்த்து சமாதியில் தூங்கும் மருத்துவர்!

டாட்டூகள் பார்வைக்கு சுவாரசியம் அளிக்கக்கூடியவை. கலையையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி டாட்டூவிலிருந்து குரல், பாடல் போன்றவற்றை வரவழைத்திருக்கிறார் லாஸ்ஏஞ்சல்ஸைச் சேர்ந்த டாட்டூ கலைஞர் நட்டே சிக்கார்ட்! உங்களுக்கு விருப்பமான பாடல், பொன்மொழி, உத்வேகம் அளிக்கக்கூடிய பேச்சுகள், செல்லப் பிராணிகளின் குரல்கள் போன்றவற்றை எங்கும் எப்பொழுதும் கேட்டு மகிழலாம். இவரது தோழி ஒரு நடனப் பெண்ணை டாட்டூவாக வரைந்துகொண்டு, அப்படியே பாடலும் கேட்டால் எப்படியிருக்கும் என்றார். அதிலிருந்துதான் இந்த யோசனை உதித்தது என்கிறார் நட்டே. கம்ப்யூட்டர் மூலம் ஒலி அலைகளை உற்பத்திச் செய்து டாட்டூ மீது செலுத்தி, பரிசோதனை செய்து பார்த்தார். அற்புதமான முடிவு கிடைத்தது. அதை பேஸ்புக்கில் வெளியிட்டபோது பலரும் ஆர்வமானார்கள். ‘ஸ்கின் மோஷன்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். “டாட்டூ உடலில் போட்ட 24 மணி நேரத்தில் உங்களது ஸ்மார்ட் போன் கேமரா மூலம் டாட்டூவைப் படமெடுத்து, நீங்கள் விரும்பிய குரலை, ஒலியை அப்ளிகேஷனுக்குள் நுழைத்துவிடுவோம். பிறகு எப்பொழுது வேண்டுமானாலும் ஸ்மார்ட்போனை டாட்டூ அருகில் கொண்டு சென்றால் அந்த ஒலியைக் கேட்கலாம். ஜூன் மாதம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்க இருக்கிறோம்” என்கிறார் நட்டே.

குரல் கொடுக்கும் டாட்டூ!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x