

முஸ்லிம் நாடுகள் பயணிகள் விவகாரத்தில் மாகாண நீதிமன்றங்கள் விதித்துள்ள தடைக்கு எதிராக அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இராக், ஈரான், சிரியா, ஏமன், லிபியா, சோமாலியா, சூடான் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த பயணி கள் அமெரிக்காவில் நுழைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தடை விதித்தார். இதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ட்ரம்பின் நடவடிக்கைக்கு பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தடையை சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் மாகாண நீதிமன்றமும் நீக்கியது.
இதைத் தொடர்ந்து இராக்கை தவிர்த்து இதர 6 நாடுகளின் பயணிகள், அகதிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து அதிபர் ட்ரம்ப் அண்மையில் புதிய ஆணையை பிறப்பித்தார். இதை எதிர்த்து 12-க்கும் மேற்பட்ட மாகாண அரசுகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதில் ஹவாய் மற்றும் மேரிலேண்ட் மாகாண நீதிமன்றங்கள், அதிபர் ட்ரம்பின் தடை உத்தரவுக்கு தடை விதித்தனர்.
இந்நிலையில் நீதிமன்றங் களின் தடை உத்தரவை எதிர்த்து அமெரிக்க அரசு வெர்ஜினியா மாகாணம், ரிச்மண்ட் நகரில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.