Published : 21 Jun 2016 04:29 PM
Last Updated : 21 Jun 2016 04:29 PM

என்.எஸ்.ஜி.-யில் இணையும் முயற்சியில் இந்தியா: அமெரிக்காவை கடுமையாக சாடும் சீனா

“நாங்கள் எந்த ஒரு நாட்டையும் குறிவைக்கவில்லை, பாகிஸ்தானோ, இந்தியாவோ எங்கள் இலக்கல்ல. அணு ஆயுதப் பரவலுக்கு எதிரான ஒப்பந்தமே எங்கள் அக்கறை” என்று சீனா தெரிவித்துள்ளது.

அணு ஆயுதப் பரவலுக்கு எதிரான ஒப்பந்த நாடுகளில் இல்லாத நாட்டை அணுசக்தி விநியோக நாடுகளில் உறுப்பினராகச் சேர்க்கக் கூடாது என்று அமெரிக்காதான் எதிர்த்து வந்ததே தவிர சீனா அல்ல என்று தற்போது சீனா தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறும்போது, “இந்தியாவை ஆதரிக்கும் அமெரிக்க அறிக்கையை நான் பார்க்கவில்லை. அணுசக்தி விநியோக நாடுகளில் அணு ஆயுதப் பரவலுக்கு எதிரான ஒப்பந்த நாடுகளில் இல்லாத நாட்டை சேர்க்கக் கூடாது என்று அமெரிக்காதான் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

அந்த விதிமுறை ஏன் ஏற்படுத்தப்பட்டது என்றால் அணு ஆயுதப் பரவலை தடுப்பதற்காகவே.

கதவு திறந்தேயிருக்கிறது, நாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டையும் எதிர்க்கவில்லை. நாங்கள் எந்த ஒரு தனிப்பட்ட நாட்டையும் எதிர்க்கவில்லை, இந்தியாவானாலும் பாகிஸ்தானாலும் எங்களது இலக்கு இவர்களல்ல.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தமே அணுசக்தி விநியோக நாடுகளில் உறுப்பினராவதற்கு மையமானது. இப்போது இந்த விதி மாற்றப்பட்டால், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நாம் எப்படி விளக்கப் போகிறோம்?

நாம் ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம், வடகொரியா விவகாரங்களும் உள்ளன. எனவேதான் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் சிக்கலாகி விடக்கூடாது என்பதுதான் சீனாவின் அக்கறை.

நாங்கள் விதிமுறைகள் மீது அக்கறை கொள்கிறோம். அமெரிக்கா விதிமுறைகளை வகுக்கிறது. இது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட பிரச்சினையல்ல. ஆனால் அணு ஆயுதப் பரவலுக்கு எதிரான ஒப்பந்தம் என்பதே எங்களது தூண். இந்தியா அணு ஆயுதப் பரவலுக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

மேலும் தற்போது நடைபெறவுள்ள என்.எஸ்.ஜி நாடுகள் கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை விவகாரம் நிகழ்ச்சித் திட்டத்தில் இல்லவே இல்லை” என்றார்.

48 நாடுகளில் ஒரு நாடு எதிர்த்தாலும் இந்தியாவை என்.எஸ்.ஜி.யில் சேர்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன நடக்கிறது..?

முன்னதாக, என்எஸ்ஜியில் உறுப்பினராக சேர்க்கக் கோரி கடந்த மே 12-ம் தேதி இந்தியா விண்ணப்பித்தது. இதுகுறித்து வரும் 24-ம் தேதி சியோலில் நடைபெற உள்ள அந்த அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது.

என்பிடியில் கையெழுத்திடாத காரணத்தால், இந்தியாவை என்எஸ்ஜியில் சேர்க்க சீனா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 16, 17-ம் தேதிகளில் சீனா சென்றிருந்த நமது வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சரை சந்தித்து ஆதரவு கோரினார்.

இதனிடையே, என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராவதை சீனா எதிர்க்கவில்லை என்றும் புதிய உறுப்பினரை சேர்ப்பது தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள் மற்றும் நடைமுறைகள் பற்றிதான் சுட்டிக்காட்டி வருகிறது என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் விண்ணப்பம்

என்எஸ்ஜியில் உறுப்பினராக சேர்க்க வலியுறுத்தி இந்தியா விண்ணப்பித்த சில தினங்களில் (மே 19) பாகிஸ்தானும் விண்ணப்பித்தது. பாகிஸ்தானை சேர்க்க வேண்டும் என்று சீனா கட்டாயப்படுத்தாவிட்டாலும், உறுப்பு நாடுகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்தியா புதிய உறுப்பினராவதைத் தடுக்கவே இத்தகைய முயற்சியை செய்து வருகிறது.

இந்தியா என்எஸ்ஜியில் சேர்ந்துவிட்டால், அதன் அணுசக்தி தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித் துவிடும் என்ற பாகிஸ்தான் கருதுகிறது. இதன்மூலம் இந்தியாவின் அணு ஆயுதமும் மறைமுகமாக அதிகரிக்கும் என்றும் பாகிஸ்தான் கருதுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x