

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டால் புதுமைக்கு பேராபத்து ஏற்படும் என்று தொழில்நுட்ப நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்காவின் சிறந்த தொழில்நுட்ப நிபுணர்கள் 140 பேர் டொனால்ட் ட்ரம்புக்கு திறந்த மடல் ஒன்ற எழுதியுள்ளனர். அந்த மடலில், “கடந்த ஓராண்டாக உங்களை நாங்கள் கவனித்து வருகிறோம். நீங்கள் அமெரிக்க அதிபரானால் புதுமைக்கு பேராபத்து ஏற்படும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம், மக்கள் கட்டுப்பாடுகள் இன்றி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வது, வெளி உலகத்துடன் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு எதிராக உங்கள் பார்வை உள்ளது” என்று கூறியுள்ளனர்.
புகழ்பெற்ற இந்திய அமெரிக்கர்களான வினோத் கோஸ்லா, (கோஸ்லா வென்சர்ஸ் நிறுவனர் மற்றும் சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் இணை நிறுவனர்), அனீஷ் சோப்ரா (நவ் ஹெல்த் தலைவர்), சுஜே ஜாஸ்வா (ட்ராப் பாக்ஸ் முன்னாள் தலைமை நிதி அதிகாரி, ஐஏசி அப்ளிகேஷன்ஸ் தலைமை பகுப்பாய்வு அதிகாரி) ஆகியோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
“பூமியின் தலை சிறந்த மக்களை அமெரிக்கா தக்கவைத்துக் கொள் வதற்கும் இவர்கள் அமெரிக் காவை நோக்கி ஈர்க்கப்படு வதற்கும் முற்போக்கு குடியுரிமை கொள்கைளே உதவின.
பிரிவினைவாத சிந்தனை கொண்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுவதை எதிர்க்கிறோம். அமெரிக்க தொழில் நுட்ப துறை யை கட்டமைக்கும் கொள்கைகள், பேச்சு சுதந்திரத்தை ஆதரிக்கும் ஒருவர் வேட்பாளராக அறிவிக் கப்படுவதையே விரும்புகிறோம்” என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.