Published : 08 Feb 2014 10:28 AM
Last Updated : 08 Feb 2014 10:28 AM

அமெரிக்க ராணுவ மோப்ப நாயை சிறைப்பிடித்த தலிபான்கள்

அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த நாயைச் சிறைப்பிடித்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தலிபான்கள் அறிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ராணுவத்தினர் கிழக்கு ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையின் போது, இந்த நாய் சிறைப்பிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தலிபான்களின் இணையதளத்தில் இது தொடர்பான வீடியோ கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. பின்னர் ஃபேஸ்புக் சமூக இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. இந்த நாய் அமெரிக்க ராணுவத்தினரால் ‘கர்னல்’ என பெயரிடப்பட்டுள்ளது. கரும்பழுப்பு நிறமான இந்த நாயைச் சுற்றி ஆயுதம் ஏந்திய 5 ஆப்கன் தீவிரவாதிகள் நிற்பது வீடியோவில் தெரிகிறது.

நாயின் உடலில் உபகரணங்களை வைத்திருப்பதற்கான கறுப்பு நிற உடை அணிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாயின் உடையில் இருந்து 3 துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி, ஜிபிஎஸ் கருவி, டார்ச் லைட் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக வீடியோ செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

தலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாகித் இதுதொடர்பாகக் கூறுகையில், “லக்மான் மாகாணத்தில் உள்ள அலிங்கர் மாவட்டத்தில் அமெரிக்கர்கள் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டனர். முஜாகிதின்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், முஜாகிதின்கள் சில ஆயுதங்களையும், ராணுவ மோப்ப நாய் ஒன்றையும் கைப்பற்றினர். அந்த நாயின் பெயர் கர்னல் என்பது பின்னர் தெரியவந்தது. கர்னல் நல்ல உடல் நலத்துடன் உள்ளது. இதன் விதி பிறகு தீர்மானிக்கப்படும் என்றார்.

காபூலில் உள்ள நேட்டோ சர்வதேச பாதுகாப்பு உதவிப்படையின் (ஐஎஸ்ஏஎப்) செய்தித் தொடர்பாளர் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த மோப்ப நாய் காணாமல் போனதை உறுதி செய்துள்ளார். “ராணுவத்தில் உள்ள நாய்கள் வெடிப்பொருள்கள், போதைப் பொருள்களைக் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தில் நூற்றுக்கணக்கான ராணுவ மோப்ப நாய்கள் ராணுவம் சார்ந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன” என்றார்.

சில முஸ்லிம் பிரிவினர் நாய்களை புனிதமற்ற விலங்காகக் கருதுகின்றனர். தலிபான்கள் நாயை சந்தேகத்துடனே அணுகுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x