

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சிரியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது.
சிரியாவில் கிளர்ச்சிப் படைகள் கட்டுப்பாட்டில் உள்ள கான் ஷேக்கான் நகர் மீது கடந்த 4-ம் தேதி சிரியா அரசு விமானப் படை ரசாயன வாயு குண்டுகளை வீசியது. இதில் குழந்தைகள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவின் அல்-சாய்ரத் விமானப் படைத் தளத்தின் மீது அமெரிக்க கடற்படை 59 ஏவுகணைகளை வீசியது. இதில் 6 வீரர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் சிரியாவின் ரசாயன குண்டு தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தன.
15 உறுப்பு நாடுகள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் 10 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதர வாக வாக்களித்தன. ரஷ்யாவும் பொலிவியாவும் எதிராக வாக்களித் தன. சீனா, கஜகஸ்தான், எத்தியோப் பியா ஆகிய நாடுகள் வாக்கெடுப் பில் பங்கேற்கவில்லை. இறுதி யில் ரஷ்யா தனது வீட்டோ அதி காரத்தால் சிரியாவுக்கு எதிரான தீர்மானத்தை ரத்து செய்தது.
சீனாவுக்கு அமெரிக்கா பாராட்டு
இதனிடையே நேட்டோவின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க், வாஷிங்டனில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்துப் பேசினார். அதன்பின் இருவரும் நிருபர்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்தனர். அப்போது அதிபர் ட்ரம்ப் கூறியதாவது:
ஐ.நா. சபை விவகாரங்களில் சீனா எப்போதுமே ரஷ்யாவுக்கு ஆதரவு அளிக்கும். ஆனால் சிரியா விவகாரத்தில் சீனா வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. அதற்காக சீனாவைப் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நேட்டோ அவசியம்
நேட்டோ என்றழைக்கப்படும் அமெரிக்க கூட்டுப் படையில் 28 நாடுகள் உள்ளன. அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய டொனால்டு ட்ரம்ப், “அமெரிக்காவை போல நேட்டோ வின் இதர உறுப்பு நாடுகளும் கூடுதல் நிதியை அளிக்கவேண்டும். இல்லையெனில் நேட்டோ கலைக்கப்படும்” என்று கூறி யிருந்தார்.
தற்போது அவர் தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் நிருபர்களிடம் கூறியபோது, என்னுடைய கோரிக்கைகளை நேட்டோ உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த கூட்டமைப்பு மிகப்பெரிய வலுவான அணி. உலகின் பாதுகாப்புக்கு நேட்டோ மிகவும் அவசியம். சர்வதேச தீவிர வாதத்தை நாங்கள் வேரறுப்போம் என்று தெரிவித்தார்.