

உலகம் முழுவதும் தெருவோரக் கடைகள் இருக்கின்றன. அதிக வாடகை கொடுத்து கட்டிடங்களில் கடை வைக்க இயலாதவர்களே பெரும்பாலும் தெருவோரக் கடைக்காரர்களாக இருக்கிறார்கள். பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில் இருக்கும் தெருவோரக் கடைகள் சற்று வித்தியாசமானவை. இந்தக் கடைகள் அனைத்தும் முழங்காலுக்குக் கீழே இருக்கின்றன. கடையில் உள்ள பொருட்கள் கண்ணாடி அலமாரிகளில் வெளியில் தெரியும்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. என்ன வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டு, வாடிக்கையாளர்கள் குனிந்து சிறிய ஜன்னல் வழியே கடைக்காரரிடம் பொருட்களைக் கேட்டு வாங்க வேண்டும். இந்தக் கடைகளில் சிகரெட், மது பானங்கள், நொறுக்குத் தீனிகள், குளிர் பானங்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. மதுபானங்கள் விற்பனை செய்யும் கடைகள் இரவில்தான் திறக்கப்படுகின்றன. மற்ற கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கின்றன. கம்யூனிச அரசாங்கம் வீழ்ந்த பிறகு புதிதாக உருவான தொழில்முனைவோர்கள் இவர்கள். கடைகளின் வாடகை கட்டுப்படியாகாததால் மினியேச்சர் கடைகளை உருவாக்கிக் கொண்டனர். தற்போது இந்தக் கடைகள் மெதுவாக மறைந்து வருகின்றன. ஆனால் பல்கேரியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடையைப் பார்வையிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
மினியேச்சர் கடைகள்!
ஸ்விட்சர்லாந்தில் வசிக்கும் சிபைல் ஜ்விகார்ட் குடும்பத்துக்கு மாடு வளர்ப்பதுதான் தொழில். 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாடு மூன்று கன்றுகளை ஈன்றது. அவற்றில் 2 பெண் கன்றுகள் மலட்டுத் தன்மையுடனும் இன்னொன்று காளையாகவும் இருந்தன. இவற்றை வைத்து பால் வியாபாரம் செய்ய முடியாது என்று நினைத்த சிபைல், இறைச்சிக் கடையில் விற்பதற்கு முயற்சி செய்தார். ஆனால் அவருடைய மகள்கள் கன்றுகளை விற்கக்கூடாது என்றனர். கன்றுகளைப் பராமரிக்கும் செலவுகளை அவர்கள் ஏற்றுக் கொள்வதானால் விற்கப் போவதில்லை என்றார் சிபைல். மூன்று கன்றுகளுக்கும் பெயரிட்டு வளர்த்தனர். கன்றுகள் ஓரளவு வளர்ந்தவுடன் அவற்றை வைத்து சம்பாதிக்க முடிவு செய்தனர். “பால் எதிலிருந்து கிடைக்கிறது என்று கேட்டால் குழந்தைகள் கடைகளிலிருந்து என்கிறார்கள். குழந்தைகளை மாடுகளுடன் பழக விட்டு, எல்லாவற்றையும் அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொள்ளும் திட்டத்தை உருவாக்கினோம். இன்று பெரியவர்கள் மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களே மாடுகளைச் சுத்தம் செய்து, மாடுகளைக் கட்டிப் பிடித்தபடி அமர்ந்திருந்தால் அவர்களின் மன அழுத்தம் மாயமாகும். 2 மணி நேரம் மாடுகளுடன் செலவிட 3,300 ரூபாய் கட்டணம். 7 வயதிலிருந்து குழந்தைகளை அனுமதிக்கிறோம். மாடுகளை வாடிக்கையாளர்களுக்குப் பழக்கப்படுத்துவோம். விளம்பரதாரர்கள் கிடைத்தால் இன்னும் பல விஷயங்களைச் சேர்த்து, மாடு தெரபியைப் பெரிய அளவுக்குக் கொண்டு செல்வோம்” என்கிறார் சிபைலின் மகள். விலங்குகள் ஆர்வலர் மரியோ பெக்கர் கூறியபோது, “நாய், பூனை களைப் போல மாடுகள் மக்களின் நெருக்கத்தை விரும்புவதில்லை. மாடுகளைக் கட்டிப் பிடிப்பதால் எந்தப் பயனும் இல்லை” என்கிறார்.
மாடு தெரபிக்கு கட்டணமா?