

இராக்கில் நேற்று 2 இடங்களில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் வெடிகுண்டு தாக்குதல்களில் 27 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் பாக்தாத்தில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மை யாக வாழும் நியூ பாக்தாத் பகுதி உள்ளது. இங்கு மக்கள் நடமாட்டம் மிகுந்த வர்த்தகப் பகுதியில் வெடிகுண்டு பொருத்திய கார் ஒன்றை தீவிர வாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில் அப்பாவி மக்கள் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் காயம் அடைந்தனர்.
இதற்கு அடுத்த தாக்குதலாக, பாக்தாத் நகருக்கு மேற்கே 20 கி.மீ. தொலைவில் உள்ள தாஜி நகரில், சோதனைச் சாவடி ஒன்றின் மீது வெடிகுண்டு பொருத்திய காரை தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் மோதி வெடிக்கச் செய்தார். இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 5 பேர், பொதுமக்கள் 7 பேர் என மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காயம் அடைந்தனர்.
இவ்விரு தாக்குதல்களுக்கும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலை யில் பலத்த காயமடைந்த சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படு கிறது.
இராக்கில் பாதுகாப்பு படைகள் மற்றும் அரசுப் பணிகளில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மை வகிக்கின்றனர். இவர்களுக்கு எதிராக சன்னி முஸ்லிம்களை கொண்ட ஐ.எஸ். அமைப்பு அடிக்கடி தாக்குதல் நடத்தி வரு கிறது. சமீப காலமாக பாக்தாத்தில் ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல் அன்றாட நிகழ்வாகி விட்டது.
ஐ.எஸ். வசமிருக்கும் ஃபலூஜா நகரை நோக்கி இராக்கிய சிறப்பு படைகள் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப் பட்டன. இந்நிலையில் பாதுகாப்பு படைகளின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் பாக்தாத் மற்றும் அதற்கு அருகில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தியிருக் கலாம் என கருதப்படுகிறது.
பாக்தாத் நகருக்கு மேற்கே 65 கி.மீ. தொலைவில் ஃபலூஜா உள்ளது. மேற்கு இராக்கில் ஐ.எஸ். வசமிருக்கும் முக்கிய நகரம் இதுவாகும். இராக்கில் வடக்கு மற்றும் மேற்குப் பகுதி களும் இரண்டாவது பெரிய நகரான மொசுல் நகரமும் இன்னமும் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ளது. ஐ.எஸ். தீவிரவாதி களுக்கு எதிராக பெரும் அளவி லான தாக்குதலை இராக் கடந்த மாதம் தொடங்கியது.