விசா மோசடி வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: நீதிமன்றத்தில் தேவயானி கோரிக்கை

விசா மோசடி வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: நீதிமன்றத்தில் தேவயானி கோரிக்கை
Updated on
1 min read

தன் மீதான விசா மோசடி வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மனு தாக்கல் செய்துள்ளார்.

தனக்கு முழுமையான தூதரகப் பாதுகாப்பு அளிக்கப்பட்ட பிறகுதான் நீதி மன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது, எனவே தூதரகப் பாதுகாப்பு உரிமை காரணமாக தன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய அமெரிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பிரீத் பராரா கடந்த ஒரு வாரம் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், இந்திய துணைத் தூதராக செயல்பட்ட கோப்ர கடேவுக்கு அலுவலகரீதியாக மட்டுமே தூதரகப் பாதுகாப்பு உண்டு. அவரது தனிப்பட்ட நடவடிக்கைகளுக்கு இல்லை.

பணிப்பெண் தேவயானிக்கு விசா பெற்றதில் தவறான தகவல்களை அளித்து மோசடி செய்தது, பணிப்பெண்ணை அதிக நேரம் பணியில் ஈடுபடுத்தியது ஆகியவை அவரது தனிப்பட்ட செயல். எனவே அவரைக் கைது செய்யபோது அவருக்கு தூதரகப் பாதுகாப்பு இல்லை என்று பிரீத் பராரா கூறியிருந்தார்.

அந்த மனுவுக்கு பதில் அளித்து தேவயானி கோப்ரகடே சார்பில் அவரது வழக்கறிஞர் டேனியல் அர்ஷாக் இப்போது பதில் மனு தாக்கல் செய்துள்ளார். ஐ.நா.வுக்கான இந்திய தூதரக பணிக்கு மாற்றப்பட்ட தேவயானிக்கு கடந்த ஜனவரி 8-ம் தேதி அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் முறைப்படி அங்கீகாரம் வழங்கியது. அடுத்த அடுத்த நாளான ஜனவரி 9-ம் தேதிதான் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

முழுதூதரக உரிமை பெற்ற தன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய முடியாது என்று சுட்டிக் காட்டியுள்ள தேவயானி, தன் மீதான விசா மோசடி வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in