

மத்திய அமெரிக்காவில் கடலுக்கு அடியில் 7.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார். மேலும் குறுகிய கால சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால் எல்சால்வடாரின் பெரும்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. முழு சேத விவரம் இன்னமும் வெளியாகவில்லை.
பசிபிக் பெருங்கடலில் தலைநகர் சான்சால்வடாருக்கு 170 கிமீ தெற்கே, 70கிமீ ஆழத்தில் இந்த பூகம்பத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
முதலில் ரிக்டர் அளவில் இது 7.4 என்று கொடுக்கப்பட்டது, பிறகு 7.3 ஆகக் குறைக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கம் மத்திய அமெரிக்காவின் கடற்கரை நாடுகள் முழுதும் உணரப்பட்டுள்ளது. அதாவது வடக்கே கவுத்தமலா முதல் தெற்கே நிகாரகுவா, கோஸ்டா ரிகா வரையிலும் ஹோண்டுராஸின் உள்நிலப்பகுதிகளிலும் இந்த பூகம்பம் உணரப்பட்டுள்ளது.
எல்சால்வடாரில் உள்ள சான் மிகுவெல் நகரில் மின்கோபுரம் விழுந்ததில் ஒருவர் பலியானதாக மேயர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், பூகம்ப மையத்திற்கு 300கிமீ தூரம் வரை உள்ள பகுதிகளுக்கு சிறிய சுனாமி எச்சரிக்கை விடுத்து பிறகு சில நிமிடங்களில் எச்சரிக்கையை வாபஸ் பெற்றது.
ஆனால் கடற்கரைக்கு அருகில் வசிப்பவர்கள் உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிகாரகுவாவில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கர நிலநடுக்கங்களுக்குப் பிறகு பின் அதிர்வுகள் தொடர்ச்சியாக ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. கோஸ்டா ரிகாவில் 5.3 ரிக்டர் அளவில் பின் அதிர்வு ஏற்பட்டுள்ளது.